சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து விரைவில் ஊர் திரும்ப நம்பிக்கை கொண்டிருக்கும் வெளிநாட்டு ஊழியர் ராஜு

சிங்கப்பூரின் 42வது கொவிட்-19 சம்பவம் என்று பரவலாக அறியப்படும் திரு ராஜு சர்க்கார் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் கிருமித்தொற்று கண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 3 மாதங்களாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.

பெரும்பாலான நேரங்களில் மயக்க நிலையில் இருந்த அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்தது.

கிருமித்தொற்றிலிருந்து மீண்ட பிறகு டான் டோக் செங் மருத்துவமனையின் பொதுப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முதலில் கிருமித்தொற்று கண்ட வெளிநாட்டு ஊழியர்களில் ஒருவரான பங்ளாதேஷ் ஊழியர் திரு ராஜு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும்போதே அதாவது மார்ச் 30ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால், உடல் நலம் தேறி வந்த அவர், ஏப்ரல் மாத மத்தியில் தன்னுடைய மகனையும் மனைவியையும் காணொளி அழைப்பின்போது பார்த்தார்.

குடும்பத்தாரைப் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக நேற்று (மே 23) வெளிநாட்டு ஊழியர் நிலையத்திடம் திரு ராஜு குறிப்பிட்டார்.

இன்னும் மூன்று வாரங்கள்வரை தமக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாகத் தெரிவித்த திரு ராஜு, தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும் என்றார்.

திரு ராஜு கவலைக்கிடமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது ஸ்ட்ரெட்ய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளரிடம் பேசிய அவரது மனைவி, “அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன். அவர் விரைவில் தந்தையாகப் போகிரார். அவர் வீட்டுக்கு வரவேண்டும். தயவுசெய்து, அவர் உயிருடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்,” என்று உருக்கமாக கண்ணீருடன் கூறியிருந்தார். 

சுமார் 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வந்த திரு ராஜு, விரைவில் தாயகம் திரும்பி குடும்பத்தாரைப் பார்க்க இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்கு பதிலளித்த திரு ராஜு, முன்பைவிட தற்போது உடல்நலம் தேறியிருப்பதாகச் சொன்னார். பெரும்பாலான நேரங்களில் உடற்பயிற்சி செய்தல், உணவருந்துதல், குடும்பத்தாருடன் தொலைபேசி வழியாக உரையாடுதல் என தற்போது பொழுதைக் கழித்து வருகிறார்.

கடந்த வியாழக்கிழமை அவர் பேசிய காணொளி ஒன்றை வெளிநாட்டு ஊழியர் நிலையம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. அவர் விரைவில் சமூக மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் என என்டியுசி பொதுச் செயலாளர் இங் சீ மெங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

திரு ராஜுவின் உடல்நலம் தேற சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்து தெரிவித்ததைக் குறிப்பிட்டு, “மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon