தொடக்கப்பள்ளி மாணவர் சேர்க்கை இணையம் வழியாக நடத்தப்படும்; நிரந்தரவாச பிள்ளைகளுக்கு புதிய வரம்பு

அடுத்த ஆண்டுக்கான தொடக்கநிலை முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை பதிவு ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 30ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்து உள்ளது. 

கொவிட்-19 சூழல் காரணமாக இம்முறை முழுக்க முழுக்க இணையத்திலேயே பதிவு நடைபெறும் என்றும் பள்ளிகளுக்கு நேரில் சென்று பதியும் முறை இடம்பெறாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த ஆண்டு முதல் தொடக்கநிலை முதலாம் வகுப்புப் பதிவில் நிரந்தரவாசத் தகுதி பெற்ற மாணவர்களுக்கு சில பள்ளிகளில் வரம்பு விதிக்கப்படுகிறது. 

நிரந்தரவாச மாணவர்கள் அதிகபட்சமாக 25 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை அந்தப் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவர். அதற்கேற்ப பதிவு நடைபெறும்.

சிங்கப்பூருடன் நிரந்தரவாசப் பிள்ளைகள் ஒருங்கிணைவதையும் சிங்கப்பூர் பிள்ளைகளுடன் நிரந்தரவாசப் பிள்ளைகள் ஒன்றுகலந்து பழகுவதைவும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு அறிமுகம் செய்யப்படும் இந்த வரையறை நடவடிக்கை தொடக்கப் பள்ளிகளில் நிரந்தரவாச மாணவர் குழுக்கள் ஏற்படுவதைத் தடுக்கும் என அமைச்சு கூறியது.

அடுத்த ஆண்டு தொடக்கநிலை முதலாம் வகுப்புக்கு தகுதிபெறும் மாணவர்களின் ‘2சி’ மற்றும் 2சி துணைப் பதிவு ஆகிய கட்டங்களில் நடைபெறும் பதிவிற்கு மட்டுமே இந்தப் புதிய நடைமுறை பொருந்தும்.

இருப்பினும் இந்த புதிய வரையறை பெரும்பாலான பள்ளிகளையும் நிரந்தரவாச மாணவர்களையும் பாதிக்காது என்றும் இதற்கு முந்திய நிரந்தரவாச மாணவர்களின் பதிவு விகிதம் 25 முதல் 30 விழுக்காட்டிற்குக் கீழ் இருந்து வந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

அண்மைய தொடக்கநிலை முதலாம் வகுப்பு  சேர்க்கையின்போது நிரந்தரவாச மாணவர் விகிதம் 25% முதல் 30% என்னும் விகிதத்திற்கு நெருக்கமாக இருந்த பத்து பள்ளிகளில் மட்டும் புதிய வரையறை நடப்புக்கு வரும்.

புக்கிட் தீமா தொடக்கப் பள்ளி, புக்கிட் வியூ தொடக்கப் பள்ளி, சங்காட் தொடக்கப் பள்ளி, கீரின்டேல் தொடக்கப் பள்ளி, மேரிமவுண்ட் கான்வென்ட் பள்ளி, நார்த் ஸ்பிரிங் தொடக்கப் பள்ளி, ஓப்ரா எஸ்டேட் தொடக்கப் பள்ளி, பைனியர் தொடக்கப் பள்ளி, தஞ்சோங் காத்தோங் தொடக்கப் பள்ளி, சிங்னான் தொடக்கப் பள்ளி ஆகியன அவை.

2சி கட்டப் பதிவு ஆகஸ்ட் 3ஆம் தேதியும் 2சி துணைப் பதிவு கட்டம் ஆகஸ்ட் 19ஆம் தேதியும் நடைபெறும். அப்போது இந்தப் பள்ளிகளில் நிரந்தரவாச மாணவர்களுக்கான அதிகபட்ச காலி இடங்களைப் பற்றிய விவரம் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

“2சி கட்டம் மற்றும் 2சி துணைப் பதிவு கட்டம் ஆகியன உள்ளிட்ட எந்தப் பதிவு கட்டத்திலும்  பதிவு எண்ணிக்கை காலியாக உள்ள எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக இருப்பின் சிங்கப்பூர் குடிமக்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது தொடரும்.

“அதாவது, சிங்கப்பூர் குழந்தைகளுக்கு முதலில் இடம் ஒதுக்கப்படும். அதன் பின்னர் காலியாக இருக்கும் இடங்களைப் பூர்த்தி செய்ய நிரந்தரவாசப் பிள்ளைகளின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். அப்போதும் சம்பந்தப்பட்ட பள்ளியின் ஒதுக்கீட்டு வரம்பு பின்பற்றப்படும்,” என்று அமைச்சு கூறியது.

இணையத்தில் பதிவைத் தொடங்குமுன் பிள்ளைகளின் பெற்றோர் தங்களது சிங்பாஸ் கணக்கு நடப்பில் உள்ளதா என்பதை உறுதி செய்வதோடு சிங்பாஸ் இரண்டு கட்ட சரிபார்ப்பு ஏற்பாட்டைச் செய்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பதிவு தொடர்பான உதவிகளை அந்தந்தப் பள்ளிகளில் பதிவு நாளன்று காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை தொலைபேசி வாயிலாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ அணுகலாம்.

தொடக்கப் பள்ளிகள் மற்றும் அவற்றில் காலியாக உள்ள இடங்களைப் பற்றிய விவரம் ஜூன் மாதம் நடுப் பகுதியில் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online