சிங்கப்பூரில் டெங்கி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ளது. கடந்த ஒரே வாரத்தில் 872 சம்பவங்கள் பதிவாகியுள்ளன; ஐந்து வாரங்களுக்கு முந்தைய வாரத்தில் 390 சம்பவங்கள் மட்டுமே பதிவாகின.
கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்குள் ஆக அதிக எண்ணிக்கையிலான டெங்கி சம்பவங்கள் இப்போதுதான் பதிவாகி இருப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையப்பக்கம் குறிப்பிடுகிறது.
2013ஆம் ஆண்டில் ஆக அதிக எண்ணிக்கையிலான டெங்கி சம்பவங்கள் இங்கு பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆண்டில் 22,170 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டனர்; எண்மர் உயிரிழந்தனர்.
இந்த ஆண்டில் இதுவரை, 56க்கும் 80க்கும் இடைப்பட்ட வயதுடைய 12 பேர் டெங்கியால் உயிரிழந்தனர்.
ஆக அதிகமான டெங்கி தொடர்பான உயிரிழப்புகள் 2005 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அந்த ஆண்டில் 25 பேர் டெங்கியால் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு 20 பேர் பலியாகினர்.
தற்போது நிலவும் வெப்பமான, ஈரமான சூழல் டெங்கியைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்ததாக இருப்பதாகவும் இந்நிலை அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் என்றும் வாரியம் எச்சரித்துள்ளது.
டெங்கி பரவக்கூடிய சுமார் 190 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. உட்லீ, சிராங்கூன் ரோடு ஆகியவற்றில் மட்டும் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட ஐந்து பகுதிகளில் இதுவும் ஒன்று.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

