கொவிட்-19 பரவலை முறியடிப்பதற்காக சிங்கப்பூர் அரசாங்கம் எல்லைகளைத் தாண்டிய பயணங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
இதனால் சிங்கப்பூர் வழியாகச் செல்லும் இடைவழிப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களை படிப்படியாக சிங்கப்பூருக்குள் அனுமதிக்க சாங்கி விமான நிலையக் குழுமம் தயாராகி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சிங்கப்பூர் வழியாகச் செல்லும் பயணிகளுக்காக முனையம் 1, 3ல் தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
விமானப் பயணிகள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ேநாக்கில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சாங்கி குழுமம் தெரிவித்தது.
சிங்கப்பூர் வழியாகக் கடந்து செல்லும் இடைவழிப் பயணிகளுக்கான சேவையைத் தொடங்க தங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அது கூறியது.
இதற்கிடையே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள சில குறிப்பிட்ட நகரங்களிலிருந்து எந்தவொரு நாட்டுக்கும் செல்லும் பயணிகள் சாங்கி விமான நிலையம் வழியாகச் செல்லலாம் என்று எஸ்ஐஏ தனது இணையப் பக்கத்தில் வெளியிட்ட தகவலில் தெரிவித்தது.
ஆனால் எஸ்ஐஏ குழுமத்தைச் சேர்ந்த எஸ்ஐஏ, சில்க்ஏர், ஸ்கூட் ஆகியவற்றின் விமானச் சேவைகளைப் பயன்படுத்தினால் மட்டுமே அவர்கள் சிங்கப்பூர் வழியாகச் செல்ல இந்த அனுமதி வழங்கப்படும்.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட், பிரிஸ்பேன், மெல்பர்ன், பெர்த், சிட்னி மற்றும் நியூசிலாந்தின் ஆக்லாந்து, கிறைஸ்ட்சர்ச் ஆகிய நகரங்களிலிருந்து புறப்படும் பயணிகள் மட்டும் இடைவழிப் பயணமாக சாங்கி விமான நிலையத்தைக் கடந்து செல்ல முடியும்.
எஸ்ஐஏ குழுமத்தின் விமானங்களில் பயணம் செய்தாலும் மற்ற நகரங்களைச் சேர்ந்த பயணிகளுக்கு சிங்கப்பூர் வழியாகச் செல்ல அனுமதியில்லை.
அதே சமயத்தில் இறுதியில் ெசன்றடையும் நாட்டில் நுழைவதற்கான ஆவணங்களை பயணிகள் வைத்திருப்பது அவசியம் என்று எஸ்ஐஏ குறிப்பிட்டது.
இதர விமான நிறுவனங்கள் நடத்தும் விமானங்கள் மூலம் இடையில் பயணத்தை மாற்ற முடியாது.
"இடைவழிப் பயணிகளுக்கும் மற்ற பயணிகளுக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதற்காகவே இப்படியொரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்றும் எஸ்ஐஏ தெரிவித்தது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய சாங்கி விமான நிலையக் குழுமம், சிங்கப்பூரில் பயணிகள் இறங்கியதும் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இடைவழிப் பயணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அனுமதி பெற்ற ஊழியர்கள் தவிர மற்றவர்கள் நுழைய அனுமதி யில்லை என்று சாங்கி குழுமம் தெரிவித்தது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

