சாங்கி விமான நிலையத்தின் 5வது முனைய கட்டுமானப் பணிகள் ஈராண்டுகளுக்கு ஒத்திவைப்பு

சாங்கி விமான நிலையத்தின் 5வது முனைய கட்டுமானப் பணிகள் ஈராண்டுகளுக்கு ஒத்திவைப்பு

2 mins read
88680075-e8e5-4cb1-94d2-41d35243159c
இந்த திட்டப்பணியை 2030ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கொள்ளைநோய் விமானப் போக்குவரத்துத் துறையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் மாபெரும் சாங்கி விமான நிலைய முனையம் 5 திட்டப்பணியின் கட்ட்மானப் பணிகள், குறைந்தபட்சம் ஈராண்டுகளுக்கு தள்ளி வைக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் இன்று (ஜூன் 16) தெரிவித்தார்.

விமானப் பயணத்துறை எவ்வாறு மாறும் என்பது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், முனையம் 5ன் வடிவமைப்பு பாதுகாப்புத் தேவைகளையும் கணக்கில் கொண்டு மாற்றப்படும் என்றார்.

இந்த திட்டப்பணியை 2030ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய முன்பு திட்டமிடப்பட்டிருந்தது.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை கொவிட்-19 அலைகள் அவ்வப்போது அடிக்கும் வாய்ப்பு இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

போக்குவரத்து அமைச்சின் உபகாரச் சம்பளத்தைப் பெறும் 12 பேரிடையே இணையம் வழி உரையாடியபோது இந்தத் தகவல்களை அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சின் நிரந்தரச் செயலாளர் லோ இங்காய் செங் உடன் நிலப் போக்குவரத்து ஆனையம் மற்றும் சிங்கப்பூர் துறைமுக ஆணையம், சிங்கப்பூர் பயணிகள் விமானப் போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கொவிட்-19 காரணமாக உலக அளவில் விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் சாங்கி விமான நிலையம் 25,200 பயணிகளைக் கையாண்டது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 99.5% சரிவை இது காட்டுகிறது.

சாங்கி விமான நிலைய முனையம் 5, தொடக்கத்தில் ஆண்டுக்கு சுமார் 50 மில்லியன் பயணிகளைக் கையாளும் விதத்தில், எதிர்காலத் தேவைகளையும் கணக்கில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.

அத்துடன், முனையம் 2ல் மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகளையும் சேர்த்து சாங்கி விமான நிலையம் ஆண்டுக்கு 140 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் பெறும்.

காலந்தாழ்த்தப்பட்டாலும் சாங்கி முனையம் 5 உட்பட, சிங்கப்பூரின் பெரிய உள்கட்டமைப்பு திட்டப் பணிகள் முடிக்கப்படும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்