வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்குச் சரிந்துவிட்டது என்றும் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்றும் மனிதவள அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
கடந்த ஆண்டு முடிவிலிருந்ததைக் காட்டிலும் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில், பணிப்பெண்கள் தவிர்த்து, வேலையில் இருப்போரின் எண்ணிக்கை 25,600 குறைந்துவிட்டதாக அமைச்சு நேற்று (ஜூன் 15) தெரிவித்தது.
காலாண்டு அடிப்படையில் இதற்குமுன் இப்படி ஒரு சரிவு ஏற்பட்டதில்லை.
வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததே இதற்குக் காரணம்.
வேலையில் இருக்கும் உள்ளூர்வாசிகளின் எண்ணிக்கையும் சற்று குறைந்தது. வர்த்தகம், சுற்றுலா சார்ந்த தொழில்துறைகளில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகளவில் உள்ளூர் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்ததாக அமைச்சின் வேலைச் சந்தை காலாண்டு அறிக்கை குறிப்பிடுகிறது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஆட்குறைப்பும் அதிகமாக இருந்தது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, 2010 செப்டம்பருக்குப் பிறகு ஆக மோசமான வீழ்ச்சியைக் கண்டது.
சிங்கப்பூரர்களின் வேலையின்மை விகிதம் முதல் காலாண்டு முடிவில் 3.5 விழுக்காடாக உயர்ந்து விட்டது. முந்தைய காலாண்டில் அது 3.3 விழுக்காடாக இருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் முடிவில் 3.2 விழுக்காடாக இருந்த நிரந்தரவாசிகளையும் உள்ளடக்கிய உள்ளூர்வாசிகளின் வேலையின்மை விகிதம் 2020 மார்ச் முடிவில் 3.3 விழுக்காடாகக் கூடியது.
ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2.4 விழுக்காடாக உள்ளது.
இவ்வாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் ஏறத்தாழ 3,220 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டதாகவும் அவர்களில் உள்ளூர்வாசிகள் 1,537 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, கடந்த டிசம்பரில் 52,700ஆக இருந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு மார்ச்சில் 46,300ஆக இறக்கம் கண்டது.
காலிப் பணியிடங்களுக்கும் வேலையில்லாதோருக்குமான விகிதம் 0.71ஆக இருந்தது. அதாவது, வேலை தேடுவோர் பத்துப் பேர் எனில், ஏழு காலிப் பணியிடங்களே இருந்தன.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

