'இல்லப் பணிப்பெண்கள் வாரநாட்களில் வெளியே சென்று நண்பர்களைப் பார்க்கலாம்'

'இல்லப் பணிப்பெண்கள் வாரநாட்களில் வெளியே சென்று நண்பர்களைப் பார்க்கலாம்'

2 mins read
977e86cd-19e1-431f-8fb2-40671b58d569
நண்பர்களுடன் கூடினாலும் ஐவருக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் பொது இடங்களில் கூடி, சுற்றித் திரியக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கிருமி முறியடிப்புத் திட்ட நடவடிக்கைகள் இரண்டாம் கட்டமாக நாளை மறுநாள் தளர்த்தப்பட்ட பிறகு இல்லப் பணிப்பெண்கள் வெளியே சென்று தங்கள் நண்பர்களை மீண்டும் சந்திக்க அனுமதிக்கப்படுவர்.

இருப்பினும் இதில் சில கட்டுப்பாடுகள் உள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

இல்லப் பணிப்பெண்கள் தங்களின் ஓய்வு நாட்களை வெளியே கழிக்க விரும்பினால், வாரநாளன்று அவ்வாறு செய்ய முதலாளியிடம் அனுமதி நாட வேண்டும்.

வாரநாட்களில் வெளியிடங்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நண்பர்களுடன் கூடினாலும் ஐவருக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் பொது இடங்களில் கூடி, சுற்றித் திரியக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிட்டி பிளாசா, லக்கி பிளாசா, பெனின்சுலா பிளாசா போன்ற கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பணம் அனுப்ப விரும்புவோர் முதலில் முகவர்களுடன் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் அல்லது இணையத்தளங்கள் மூலம் பணத்தை அனுப்ப வேண்டும்.

இந்நிலையில் முகக்கவசம் அணிவதுடன் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இல்லப் பணிப்பெண்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தாங்கள் செல்லும் இடங்கள் குறித்து முதலாளிகளிடம் தெரிவிப்பதுடன் 'டிரேஸ் டுகெதர்' செயலியைப் பதிவிறக்கம் செய்து அதை இயக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தொடர்புகளின் தடமறிய இது வசதியாக இருக்கும்.

"கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நாம் இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் வீண் போகாமல் இருக்க நம் சமூகம் தொடர்ந்து கட்டுப்பாட்டுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்," என்று மனிதவள அமைச்சு கூறியுள்ளது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்