வெஸ்ட் கோஸ்ட், பைனியர் பகுதிகளில் வசிப்போருக்காக வேலை தேடும் பணி இனி எளிதாக்கப்படுகிறது. இந்த ஓர் ஆண்டுத் திட்டத்தின்கீழ் இடம்பெறவுள்ள மெய்நிகர் வேலைச் சந்தைகளுடன் சமூக மன்றங்களில் வேலை தொடர்பான ஆலோசனை வழங்க சுயசேவை சாவடிகள் அமைக்கப்படும்.
மெய்நிகர் வேலைச் சந்தைகளில் 500க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இருக்கும். இவை தீவின் மேற்குப் பகுதியில் இருக்கும் என்று மக்கள் கழகம் அதன் அறிக்கையில் கூறியது.
அத்துடன் அடுத்த மாதத்தில் ஐந்து சமூக மன்றங்களில் அமைக்கப்படவுள்ள சுயசேவை சாவடிகளில் தொண்டூழியர்களின் உதவியுடன் அடிப்படை வாழ்க்கைத்தொழில் ஆலோசனையையும் பெறலாம்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி, பைனியர் தனித்தொகுதி, என்டியுசியின் வேலை நியமன, வேலைத்தகுதி கழகம், தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் ஆகியவை இணைந்து இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
சென்ற மாதம் அமைக்கப்பட்ட தேசிய வேலைகள் மன்றத்திற்குத் துணையாக இத்திட்டம் இருக்கும் என்று இன்று (ஜூன் 17) வெஸ்ட் கோஸ்ட் மார்கெட் ஸ்குவேருக்குச் சென்ற தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
அத்துடன் ரொக்கமில்லா கட்டணமுறை வழி மின்னிலக்கமயமாவதை உணவங்காடி கடைக்காரர்களிடையே ஊக்குவிக்கும் திட்டம் குறித்தும் திரு ஈஸ்வரன் பேசினார். கடைக்காரர்களும் மூத்த குடிமக்களும் மின்னிலக்கத்துக்கு மாற உதவுவதற்காக 1,000 மின்னிலக்க தூதர்கள் நியமிக்கப்படுவர் என்று திரு ஈஸ்வரன் முன்னரே கூறியிருந்தார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

