சிங்கப்பூரில் வாகன உரிமைச் சான்றிதழ் (COE) ஏலம் அடுத்த மாதம் (ஜூலை) 6ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளது.
ஜூலை மாதத்தில் ஏலம் விடப்படவுள்ள சான்றிதழ்களின் எண்ணிக்கை 8,737.
வாகன உரிமைச் சான்றிதழ் ஏலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட காலத்தில் ஒதுக்கப்பட்டிருந்த சான்றிதழ்களும் கட்டங்கட்டமாக சந்தைக்கு கொண்டுவரப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று (ஜூன் 18) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
நாளை முதல் அதிக எண்ணிக்கையிலான வாகன காட்சிக்கூடங்களும் விற்பனையகங்களும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்களை வாங்க விரும்புவோர் சோதனை ஓட்டம் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்படும்.
வாகன உரிமைச் சான்றிதழ் ஏலம் மீண்டும் தொடங்க இரண்டு வாரகாலம் இருப்பதால் விற்பனையாளர்களும் வாகனங்களை வாங்க விரும்புவோரும் திட்டமிட்டு, செயல்படுத்த கால அவகாசம் உள்ளது.
ஜூலை 6க்குப் பிறகு, வழக்கம்போல மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் திங்கட்கிழமைகளில் ஏலம் நடைபெறும்.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஏலம் நடைபெறாததால், அந்த 3 மாதங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 19,490 சான்றிதழ்கள் இவ்வாண்டு ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் சந்தைக்கு வரும்.
அவற்றுள், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 6,494 சான்றிதழ்கள் சந்தையில் விடுவிக்கப்படும். எஞ்சிய 12,996 சான்றிதழ்கள் அதற்கடுத்த 9 மாதங்களில் சந்தைக்கு வரும்.
கொவிட்-19 பரவலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை நடப்பில் இருந்த காலத்தில் அதிகரித்த தேவைகளையும், நீண்டகால சந்தை நிலைத்தன்மையையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

