இறுதிச் சடங்கை நடத்தும் நிறுவனங்கள், இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தும் வசதிகளைக் கொண்டிருந்தால் இனி அவை புதிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
உடலைப் பதப்படுத்தும் சேவைகளை வழங்குவோர் தேசிய சுற்றுப்புற வாரியத்துடன் பதிவு செய்யப்பட்டிருப்பதை அந்நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
உடலைப் பதப்படுத்தும் ஊழியர்கள், தேசிய தொற்றுநோய் நிலையம் நடத்தும் அடிப்படை தொற்றுநோய்க் கட்டுப்பாடு வகுப்புகளுக்குச் சென்றிருக்க வேண்டும். அதுபோக, பதிவு செய்யப்பட்ட மற்றொரு நிபுணரின் மேற்பார்வையின்கீழ், உள்ளூரில் குறைந்தது 25 உடல்களைப் பதப்படுத்திய அனுபவத்தை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தும் வசதிகளைக் கொண்டிருக்கும் இறுதிச் சடங்கு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும் தேசிய சுற்றுப்புற வாரியம், உடலைப் பதப்படுத்தும் ஊழியர்கள் மற்றும் அவர்களிடமிருந்து வேலையைக் கற்றுக்கொள்பவர்களின் விவரங்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்று கூறியது.
சிங்கப்பூரில் இறுதிச் சடங்கு சேவைகளின் தரநிலையை உயர்த்த இந்த ஏற்பாடு நோக்கம் கொண்டு உள்ளதாக வாரியம் சொன்னது.
இப்புதிய நிபந்தனைகள் குறித்து இறுதிச் சடங்கு நிறுவனங்களுக்கு நேற்று (ஜூன் 22) தெரியப்படுத்தப்பட்டன.
இதற்கு முன்னதாக, இறுதிச் சடங்கு சேவைகளை வழங்கிய நிறுவனங்கள் சிலவற்றின் ஊழியர்களின் கவனக்குறைவின் காரணமாக தவறுகள் நிகழ்ந்தன.
அத்தகைய ஒரு சம்பவத்தில், தவறுதலாக வேறு ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
உடலைப் பதப்படுத்தும் சேவைகளை வழங்கும் அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரபூர்வமாக பயிற்சி அளிக்கப்படவில்லை, அல்லது வேலைக்கு ஏற்புடைய சான்றிதழ்களை அவர்கள் வைத்திருக்கவில்லை என்று கடந்த ஆண்டு சண்டே டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இறுதிச் சடங்கு நடத்திய ஒரு சில நிறுவனங்களுக்கு எதிராக புகார்களும் எழுந்தன.
இதைத் தொடர்ந்து இப்புதிய நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இறுதிச் சடங்கை நடத்தும் அனைத்து நிறுவனங்களுக்கும் புதிய வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

