சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியில் லீ சியன் யாங்

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியில் லீ சியன் யாங்

2 mins read
3e6fb991-27c8-44ff-9688-614915407468
தியோங் பாரு ஈரச்சந்தையில் கட்சியின் உறுப்பினர் அட்டையை திரு லீ சியன் யாங்கிற்கு திரு டான் செங் போக் வழங்கினார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

பிரதமர் லீ சியன் லூங்கின் சகோதரரான லீ சியன் யாங் திரு டான் செங் போக்கின் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியில் சேர்ந்துள்ளதாக இன்று (ஜூன் 24) அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்பில் தியோங் பாரு ஈரச்சந்தையில் கட்சியின் உறுப்பினர் அட்டையை திரு லீ சியன் யாங்கிற்கு திரு டான் செங் போக் வழங்கினார்.

அப்பொழுது பேசிய திரு டான், திரு லீ சில காலமாகவே கட்சி உறுப்பினராக இருந்துள்ளார் என்றும் கொரோனா கிருமி நோயால் அவருக்கு முறையாக உறுப்பினர் அட்டை வழங்க இயலவில்லை என்றும் தெரிவித்தார்.

"சில காலத்திற்கு முன்னரே கட்சியில் சேர்ந்த லீ சியன் யாங்கிற்கு இன்று காலை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்குவதில் நான் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்," என்று திரு டான் கூறினார்.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்கப்பட்டதற்கு பதிலளித்த லீ சியன் யாங், "நான் அது குறித்து வெளியிடத் தயாராக இருக்கும்போது நீங்கள் தெரிந்துெகாள்வீர்கள்," என அவர் பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய திரு லீ, "நான் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியில் சேர்வதற்கு காரணம், திரு டான் சிங்கப்பூர், சிங்கப்பூரர்களுக்கு சரியானவற்றை செய்வதற்கு கடப்பாடு கொண்டுள்ளார் என்பதுடன் அவர் சிங்கப்பூரை நேசிக்கிறார் என்பதாலும்தான்.

"மேலும், சிங்கப்பூர் எப்படி இருக்க வேண்டும் என்ற அவருடைய சிந்தனையுடன் ஒத்துப் போகிறவர்களை அவர் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளார். அவருடைய சிந்தனை வடிவம் மேம்பட்ட சிங்கப்பூரை உருவாக்கும் என நான் நம்புகிறேன்," என்று திரு லீ விளக்கினார்.

வருமான உயர்வுதாழ்வுநிலை, வீடமைப்பு, ஆளுமை, வெளிப்படைத்தன்மை ஆகிய பிரச்சினைகள் உள்ளதாகக் கூறிய திரு லீ, "சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியிடம் கருணையுடன் கூடிய அணுகுமுறை," இருப்பதாகத் தெரிவித்தார்.

திரு லீயைப் போலவே திரு டானும் லீ சியன் யாங் தேர்தலில் போட்டியிடுவாரா எனக் கூற மறுத்துவிட்டார்.

"இது குறித்து நான் உறுதியாக எதுவும் கூற முடியாது. கவலை வேண்டாம், அரசியலில் எப்பொழுது முடிவெடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இதில் சரியான நேரம் முக்கியமான ஒன்று," என்று சொன்னார் திரு டான்.

குறிப்புச் சொற்கள்