'ஜூலை மாத இறுதிக்குள் 80% வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிருமித்தொற்று இருக்காது'

1 mins read
3bd618dd-aef2-49ca-be2b-a80dbfbfd1d8
இதர 20 விழுக்காட்டு ஊழியர்களுக்கும் பரிசோதனை நடத்தி ஆகஸ்ட்டில் அவர்களுக்கும் கிருமித்தொற்று இல்லாத நிலையை ஏற்படுத்திவிடலாம் என்று அதிகாரிகள் நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடுத்த மாத முடிவில் கிருமித்தொற்று இருக்காது என்றும் அதனையடுத்து அவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் காணொளி வழி நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இன்று (ஜூன் 25) இதனைத் தெரிவித்தார்.

"அடுத்த மாத இறுதிக்குள், தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களில் சுமார் 70 முதல் 80 விழுக்காட்டினருக்கு கிருமித்தொற்று இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"அதாவது அவர்கள் குணமடைந்து இருப்பார்கள் அல்லது அவர்களுக்கு கிருமித்தொற்று இல்லை என்பது பரிசோதனை மூலம் தெரியவந்திருக்கும்," என்றார் அமைச்சர்.

இதர 20 விழுக்காட்டு ஊழியர்களுக்கும் பரிசோதனை நடத்தி ஆகஸ்ட்டில் அவர்களுக்கும் கிருமித்தொற்று இல்லாத நிலையை ஏற்படுத்திவிடலாம் என்று அதிகாரிகள் நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இப்போதைய நிலபரப்படி சுமார் 120,000 ஊழியர்கள் குணமடைந்து இருக்கிறார்கள். அல்லது அவர்களுக்கு கிருமித்தொற்று இல்லை.

சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் 323,000 ஊழியர்கள் தங்கி இருக்கிறார்கள். சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றியவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு ஊழியர்கள்.

திங்கட்கிழமை நிலவரப்படி, 79,000 வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்று கடந்த செவ்வாய்க்கிழமை மனிதவள அமைச்சு தெரிவித்தது.

என்றாலும், 'TraceTogether' செயலியைப் பதிவிறக்கம் செய்திருப்பது போன்ற காரணங்களால் அவர்களில் சுமார் 17,000 பேர் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்