இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய பெண்ணுக்கு கிருமித்தொற்று

இந்தியாவிலிருந்து திரும்பி, சிங்கப்பூரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 44 வயது நிரந்தரவாசிக்கு நேற்று (ஜூன் 30) கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அந்தப் பெண் ஜூன் 24ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தார். விமான நிலையத்திலிருந்து, தனிமைப்படுத்தும் இடத்துக்கு தனி வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட அவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். 

அவருக்கு கடந்த சனிக்கிழமை கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டன. 

இதற்குக் முன்பு பங்ளாதேஷிலிருந்து திரும்பிய ஒருவருக்கு கடந்த மாதம் 14ஆம் தேதி கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

நேற்று உள்ளூர் சமூகத்தில் பதிவான 5 கிருமித்தொற்று சம்பவங்களில் இரண்டு சிங்கப்பூரர்கள் தொடர்பானவை; மற்றவை வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்கள் தொடர்பானவை.

அவர்களில் ஒரு சிங்கப்பூரருக்கும் இரண்டு வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்களுக்கும்  அரசாங்கம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை பரிசோதனைகள் மூலம் கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. வேலை அனுமதிச்சீட்டு வைத்திருக்கும் மற்றொருவருக்கு அறிகுறிகள் இல்லாவிட்டாலும், அவர் முதல் நிலை ஊழியராக இருப்பதால் அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

சமூகத்தில் கண்டறியப்பட்டவற்றுள் இருவருக்கு சில காலத்துக்கு முன்பு கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் தற்போது கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இல்லை என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online