லக்கி பிளாசா, பிளாசா சிங்கப்பூரா, அயன் ஆர்ச்சர்ட், டாங் பிளாசா உள்ளிட்ட ஆர்ச்சர்ட் ரோட்டில் இருக்கும் கடைத் தொகுதிகள், ஜுவல் சாங்கி விமான நிலையம் ஆகிய இடங்களுக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக சுகாதார அமைச்சு நேற்று (ஜூலை 6) தெரிவித்தது.
கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.
உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று அந்த எண்ணிக்கை 23ஆக இருந்தது. அதில் மூவர் சிங்கப்பூரர், மற்ற 20 பேர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.
இந்த 23 பேரில் 18 பேர், அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளும் பரிசோதனைகளில் கிருமித்தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டவர்கள்.
அவற்றில் 17 சம்பவங்கள், ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்புடையவை.
6 சம்பவங்களின் தொடர்புகளைக் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து திரும்பிய மூவருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் இருவர் ஏமனிலிருந்து சென்ற மாதம் 24ஆம் தேதியும் இந்தியாவிலிருந்து ஜூன் 23ஆம் தேதியும் சிங்கப்பூருக்குத் திரும்பிய சிங்கப்பூரர்கள். மற்றவர் பிலிப்பீன்சிலிருந்து வந்த வேலை அனுமதிச் சீட்டு கொண்ட நபர்.
எண் 1 நார்த் கோஸ்ட் டிரைவில் இருக்கும் மைக்ரான் செமிகண்டக்டர் ஏஷியாவில் புதிய கிருமித்தொற்று குழுமம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 12ஆக உயர்ந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 7ஆக இருந்தது.
ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 5ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 4ஆக இருந்தது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். கிருமித்தொற்று கண்டு, ஆனால் மற்ற காரணங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆகியுள்ளது.