இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த இருவருக்கு கிருமித்தொற்று

ஜூரோங் லேக் கார்டன்சில் இருக்கும் ‘ஆக்டிவ்எஸ்ஜி’ உடற்பயிற்சிக்கூடம், தெம்பனிஸ் மாலில் இருக்கும் ஸ்டார்ஹப் கடை, கிரேட் வோர்ல்ட் சிட்டி, ஜூரோங் பாயின்ட், ஜெம் கடைத்தொகுதியில் இருக்கும் ஃபேர்பிரைஸ் ஹப் ஆகிய இடங்களுக்கு  கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக சுகாதார அமைச்சு நேற்று (ஜூலை 7) தெரிவித்தது.

கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த இந்திய நாட்டவர் இருவர், வேலை அனுமதிச்சீட்டுடன் பிலிப்பீன்சிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த  ஒருவர் ஆகிய மூவருக்கும் கிருமித்தொற்று இருப்பதாக நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சிங்கப்பூருக்கு வந்த பின் இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

நேற்று உள்ளூர் சமூகத்தில் உறுதி செய்யப்பட்ட 20 கிருமித்தொற்று சம்பவங்களில் 2, 9, 11 வயதுகளில் இருக்கும் மூன்று சிங்கப்பூர் குழந்தைகளும் உள்ளனர். இந்த மூவரும் ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

20ல் 12 சம்பவங்கள் ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்புடையவர்கள்; எண்மரின் கிருமித்தொற்று தொடர்பு பற்றி விசாரணை தொடர்கிறது.

உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 14ஆக உயர்ந்திருக்கிறது.

அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 8ஆக இருந்தது.

ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 6ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 4ஆக இருந்தது.

இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். கிருமித்தொற்று கண்டு, ஆனால் மற்ற காரணங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆகியுள்ளது.