95 வயது மூதாட்டியை கொலை செய்ததாக பணிப்பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு

அப்பர் சிராங்கூன் ரோட்டில் இருக்கும் வீடு ஒன்றில் 95 வயது மூதாட்டியைக் கொலை செய்ததாக 34 வயது இல்லப் பணிப்பெண் மீது இன்று (ஜூலை 8) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

நேற்று முன்தினம் அங் பெக் சாய் எனும் அந்த மூதாட்டியை மியன்மார் நாட்டவரான சந்தர் டூ கொலை செய்ததாகக் கூறப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து அன்று பிற்பகல் 2 மணிக்கு போலிசுக்கு தகவல் கிடைத்தது.

போலிசார் அங்கு சென்றபோது திருவாட்டி அங் அசைவின்றிக் கிடந்தார். அவர் இறந்துவிட்டதாக, துணை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அந்த மூதாட்டிக்கும் பணிப்பெண்ணுக்கும் இடையிலான தொடர்பு குறித்து நீதிமன்ற ஆவணங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் இருவருக்கும் பரிச்சயம் உண்டு என்று கூறப்பட்டது.

ரெக்ரியேஷன் ரோட்டில் இருக்கும் அந்த வீட்டின் முன்புறமும் பின்னால் இருந்த அடுக்களையும் போலிசாரால் தடுக்கப்பட்டிருந்தன.

ஆதாரங்களை எடுத்துக்கொண்டு போலிசார் அந்த இடத்திலிருந்து இரவு 8 மணியளவில் வெளியேறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டது.

திருவாட்டி அங் தம் குடும்பத்தாருடன் பல ஆண்டுகளாக அந்த வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்பட்டது.

வழக்கு மீண்டும் 15ஆம் தேதி விசாரணைக்கு வரும். கொலை செய்தது உறுதி செய்யப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.