சிங்கப்பூரில் மேலும் 125 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 21 சம்பவங்கள்

சிங்கப்பூரில் இன்று (ஜூலை 9) நண்பகல் நிலவரப்படி புதிதாக 125 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45,423 ஆகியுள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 21 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் 4 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்; 17 பேர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.

இந்த 21 பேரில் ஐவர், ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்பில் இருந்து, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின், இங்கு இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்.

மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.

இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.