இரு பெண்களை மானபங்கப்படுத்திய ‘ஆன்மிக மருத்துவருக்கு’ 15 மாதம் சிறைத்தண்டனை

ஆன்மிக மருத்துவர் என்று தன்னைத்தானே கூறிக்கொண்ட அப்துல் ரசாக் அப்துல் ஹமீது, 66, என்ற ஆடவருக்கு  15 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

இரண்டு மாதர்களை மானபங்கப்படுத்தியதற்காக அவருக்குத் தண்டனை கிடைத்தது. மானபங்கம் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கடந்த மார்ச் மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டு இருந்தார்.

இதே போன்ற இதர ஐந்து குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அப்துல் ரசாக், தான் நடத்தி வந்த பழைய சைக்கிள் கடையில், திரை மறைவுக்குப் பின்புறத்தில், மடக்கு மேசை ஒன்றில் உடம்புப்பிடி, மாந்திரீகக் காரியங்களைச் செய்துவந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. 

அவர், சென்ற ஆண்டு மே 25ஆம் தேதியன்று 39வயது மாதையும் அதற்கு அடுத்த மாதத்தில் ஒரு நாளில் 34 வயது மாதையும் மானபங்கம் செய்ததாக விசாரணையில் குறிப்பிடப்பட்டது.

தான் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்றும் ஆகையால் தன் மீது கருணை காட்டும்படியும் தண்டனை விதிக்கப்பட்டபோது, ஒரு கடிதம் மூலம் நீதிமன்றத்தை அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டார். 

குற்றவாளியின் மருத்துவப் பிரச்சினைகளை சிங்கப்பூர் சிறைச்சாலை சேவைத் துறை நல்ல முறையில் கையாள முடியும் என தான் மனநிறைவடைவதாக வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்தார்.