அமெரிக்க விசா கட்டுப்பாடு; சிங்கப்பூர் மாணவர்கள் தவிப்பு

அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம், மாணவர் விசாவுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் சிங்கப்பூர் மாணவர்கள் உட்பட உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய கட்டுப்பாடுகளால்  சிங்கப்பூரரான 25 வயது கேத்தரின் சுமந்திரி செய்வதறியாது திகைத்துப் போயிருக்கிறார்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘டீச்சர்ஸ் கல்லூரி’யில் மொழியியல் துறையில் முதுநிலை இறுதியாண்டு படித்து வரும் அவர் அடுத்த சில வாரங்களில் நியூயார்க் புறப்படத்தயாராக இருந்தார். இதற்காக விமானச் சீட்டுக்கும் அவர் பதிவு செய்திருந்தார்.

நியூயார்க் நகரில் சக மாணவர்களுடன் தங்க ஒரு வாடகை வீட்டையும் தேடிக் கண்டுபிடித்து அவர் இறுதி செய்து வைத்திருந்தார். 

இந்த நிலையில் அமெரிக்க குடிநுழைவு மற்றும் சுங்கவரித் துறையின் அறிவிப்பு வெளியானது. அதாவது முழுமையாக இணையம் வழியாக பாடங்களைப் படிக்கும் மாணவர்கள் விசாவுக்கு தகுதி பெற மாட்டார்கள் என்று அந்த அறிவிப்பு கூறுகிறது.

இதைக் கேட்டதும் சுமந்திரி நிலைகுலைந்து போனார்.

“இது போன்ற நிலைமை எனக்கு ஏற்பட்டதே இல்லை. அனைத்துலக மாணவர்களுக்கு நிச்சயமற்ற சூழ்நிலை நிலவுவதால் அடுத்து என்ன செய்வது என்பதே புரியவில்லை,” என்கிறார் சுமந்திரி.

விமான டிக்கெட்டை ரத்து செய்துள்ள அவர், அடுத்ததாக வாடகை வீட்டு ஒப்பந்தத்தையும் ரத்து செய்யவிருக்கிறார்.

கடந்த ஆண்டு சிங்கப்பூரைச் சேர்ந்த 4,632 மாணவர்கள் அமெரிக்காவில் படித்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட அனைத்துலக மாணவர்கள் அங்கு படித்து வருகின்றனர். 

இவர்களுடைய பல்கலைக் கழகங்கள் அனைத்தும் இணையம் வழி கற்பிக்கும் முறைக்கு மாறினால் சுமார் ஒரு மில்லியன் மாணவர்கள் அமெரிக்காவைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும். 

அப்படி வெளியேறாத மாணவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்.

கொரோனா பரவல் காரணமாக ஏற்கெனவே பல பல்கலைக்கழகங்கள் இணையம் வழியாகப் பாடங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.