எம்பிஎஸ் சூதாட்டக்கூடம், சிலேத்தார் மால் ஆகிய இடங்களுக்கு கிருமித்தொற்று கண்டவர்கள் சென்றதாகத் தகவல்

மரினா பே சேண்ட்சில் உள்ள சூதாட்டக் கூடம், சிலேத்தார் மால், பிடோக் மார்க்கெட் பிளேசில் இருக்கும் ஜயன்ட் பேரங்காடி ஆகிய இடங்களுக்கு  கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக இன்று (ஜூலை 14) அதிகாலை 12.30 மணியளவில் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை. 

முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.

பாதுகாப்பான தூர இடைவெளி விதிமுறைகளை மீறியதற்காக எண் 120 லோயர் டெல்டா ரோட்டில் இருக்கும் மினி என்விரான்மென்ட் சர்வீஸ் நிறுவனம் 14 நாட்களுக்கு (ஜூலை 26 வரை) மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் மூவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டதையடுத்து, மேலும் பரவாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அந்த நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் கண்காணிப்பில் வைக்கப்படுவதுடன் அவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனையும் செய்யப்படும். 

நேற்று, உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 11 பேரில் ஒருவர் சிங்கப்பூரர், ஒருவர் நிரந்தரவாசி, ஒன்பது பேர் வேலை அனுமதிச் சீட்டுடன் இங்கு இருப்பவர்கள்.

நேற்று சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 4 பேர் ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்புடையவர்கள். 7 பேரின் கிருமித்தொற்று தொடர்பு பற்றி விசாரணை தொடர்கிறது.

வெளிநாடுகளிலிருந்து திரும்பி, இல்லத் தனிமையில் வைக்கப்பட்டிருந்த ஐவருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் இந்தியாவிலிருந்து திரும்பிய நிரந்தரவாசி, ஒருவர் பாகிஸ்தானிலிருந்து திரும்பிய நிரந்தரவாசி, இருவர் பிலிப்பீன்சிலிருந்து திரும்பிய வேலை அனுமதிச்சீட்டு வைத்திருக்கும் ஊழியர்கள், மற்றொருவர், அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பியவர். அவர் இங்கு, வேலை அனுமதி சீட்டுடன்  பணிபுரிவோரைச் சார்ந்தவர் என்று கூறப்பட்டது.

59H துவாஸ் சவுத் அவென்யூ 1ல் இருக்கும் ஊழியர் தங்கும் விடுதியில் புதிய கிருமித்தொற்று குழுமம் அறிவிக்கப்பட்டது.

உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 14ஆக உயர்ந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 12 ஆக இருந்தது.

ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 8ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 6 ஆக இருந்தது.

இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon