தேக்கா நிலையம், எண் 41 நோரிஸ் ரோட்டில் இருக்கும் ஆல் இந்தியா சூப்பர்மார்ட் பூகிஸ்+, ஆர்ச்சர்ட் ரோட்டில் இருக்கும் 'ஆப்பிள்' நிறுவனக் கடை, எண் 492 கேலாங் ரோட்டில் இருக்கும் டான் ஃபோங் பெயின்ட், எண் 20 பிராங்கல் டெர்ரேசில் இருக்கும் செங் சியூ வா சிங்கப்பூர் பூல்ஸ் கடை ஆகிய இடங்களுக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக இன்று (ஜூலை 16) அதிகாலை 12.30 மணியளவில் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.
முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 13ஆக குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 14 ஆக இருந்தது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 8ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 6 ஆக இருந்தது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று இரண்டாவது நாளாக கொவிட்-19 தொடர்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் கொரோனா கிருமித்தொற்றால் 13.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; 582,000 பேர் உயிரிழந்தனர்.

