சுங்கை தெங்கா லாட்ஜ் உட்பட மேலும் 69 ஊழியர் தங்கும் விடுதிகள் கொவிட்-19லிருந்து விடுவிப்பு

சுங்கை தெங்கா லாட்ஜ் உட்பட மேலும் 69 ஊழியர் தங்கும் விடுதிகள் கொவிட்-19லிருந்து விடுவிப்பு

1 mins read
7d10e71f-562a-44d1-bcfa-d44aca42d6ea
16,000 ஊழியர்கள் தங்கக்கூடிய சுங்கை தெங்கா லாட்ஜ் விடுதியும் கொவிட்-19லிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் மேலும் 69 ஊழியர் தங்கும் விடுதிகள் கொவிட்-19லிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் நேற்றைய (ஜூலை 20) அறிக்கை தெரிவித்தது.

ஊழியர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட 3 விடுதிகள், விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகள் 59, கட்டுமானத் தளங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக தங்குமிடங்கள் 7 ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ளன.

ஊழியர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட விடுதிகளில் ஆகப் பெரியதான சுங்கை தெங்கா லாட்ஜ் கொவிட்-19லிருந்து விடுபட்டுள்ளது. அங்கு சுமார் 16,000 ஊழியர்கள் தங்க இயலும்.

இந்த விடுதியில் தங்கியுள்ள ஊழியர்கள் அனைவரும் பணிக்குச் செல்லலாம். ஆனால், அதற்கு முன்பு, வேலையைத் தொடங்க, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மனிதவள அமைச்சிடமிருந்து அனுமதி பெற்றிருப்பது அவசியம்.

மேலும் 11 ஊழியர் தங்கும் விடுதிகளில் உள்ள 41 புளோக்குகளில் வசிக்கும் ஊழியர்களும் கொவிட்-19லிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தெம்பனிஸ் ஊழியர் தங்கும் விடுதி, கோச்ரேன் லாட்ஜ் 1, கோச்ரேன் லாட்ஜ் 2, சாங்கி லாட்ஜ் 2, சுங்கை தெங்கா லாட்ஜ் ஆகியவற்றில் எஞ்சியிருந்த புளோக்குகளும் இதில் அடக்கம்.

இதுவரை மொத்தம் 891 விடுதிகள் கொரோனா கிருமித்தொற்றிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

நேற்றைய நிலவரப்படி, சுமார் 247,000 ஊழியர்கள் கிருமித்தொற்றிலிருந்து விடுபட்டனர் அல்லது, அவர்களுக்கு கிருமித்தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்