கடுமையான விஷம் பொருந்திய ‌ஜெல்லிமீன் சிங்கப்பூரில் இருவரைத் தாக்கியது

2 mins read
8feec031-c1ae-427f-bee9-1f32498ce21b
பாக்ஸ் ஜெல்லிமீனால் மார்ச் மாதம் தாக்கப்பட்ட திருவாட்டி ஜேட்டின் கையில் இன்னமும் உள்ள ஊதா நிறத் தழும்புகள். படங்கள்: ஜேட் டைசன் -

கடல்வாழ் உயிரினங்களிலேயே ஆக அதிக விஷம் நிறைந்ததெனக் கூறப்படும் 'பாக்ஸ் ஜெல்லிமீன்' இதுவரை இங்கு இருவரைத் தாக்கியுள்ளது.

மரணம் விளைவிக்கக்கூடிய அதனிடம் சிக்கிய நான்கு வயது சிறுமியும் 28 வயது மாதும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இருப்பினும் ஜெல்லிமீன் தென்பட்ட இடங்களான செந்தோசா, லஸாரஸ் தீவு, செயிண்ட் ஜான்ஸ் தீவு அருகே இரண்டு வாரங்களுக்குப் பொதுமக்கள் நீந்த வேண்டாம் என்று 'மரின் ஸ்ட்டியுவட்ஸ்' பாதுகாப்புக் குழு அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் இந்த உயிரினம் தென்பட்டது. அதையடுத்து இம்மாதம் மட்டும் நான்கு தடவை இது கண்ணில்பட்டது.

மிக அண்மையில் செந்தோசாவில் உள்ள பலாவான் கடற்கரையில் நான்கு வயது சிறுமியை அது தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிறுமியும் அவளது தாயாரும் ஆழமில்லாத நீர்ப் பகுதியில் இருந்தபோது, சிறுமியை ஜெல்லிமீன் தாக்கியதாகக் கூறப்பட்டது.

ஆஸ்திரேலியரான ஜேட் டைசன், மார்ச் மாதத்தில் ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையில் நீந்தியபோது, அவரை ஒரு பாக்ஸ் ஜெல்லிமீன் தாக்கியது.

இடது கையிலும் பின்னர் இடது காலிலும் வலியை உணர்ந்த அவர், தம் உடலில் ஒட்டியிருந்த 'சிலந்தி வலை' போன்ற இழைகளை உரித்து எடுத்ததாகக் கூறினார்.

நடக்க சிரமமாக இருந்ததாகவும் உடல் முழுதும் செயலற்றுப் போன உணர்வும் ஏற்பட்டதாக அவர் நியூபேப்பர் நாளிதழிடம் பகிர்ந்துகொண்டார்.

வலி முழுமையாகப் போக கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் எடுத்ததாக கூறிய அவர், இன்னமும் தம் உடலில் தழும்புகள் உள்ளதெனக் கூறி அவற்றைக் காண்பித்தார்.

இந்த ஜெல்லி மீன் தாக்கினால் கடுமையான உயர் ரத்த அழுத்தம், கீழ் முதுகில் பயங்கர வலி, மாரடைப்பு, சுவாசக் கோளாறு போன்றவற்றுடன் மரணமும் ஏற்படலாம் என்று தேசிய பூங்காக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கேரன் டான் கூறினார்.

இவ்வாறு தாக்கப்படும்போது நிதானமாக நீரை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்