அனைத்து ஊழியர் தங்கும் விடுதிகளும் ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் கொவிட்-19லிருந்து விடுவிக்கப்படும். ஆனால், ஊழியர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட விடுதிகளில் 17 தனிப்பட்ட கட்டடங்கள் அதற்கு விதிவிலக்கு.
அவை தனிமைப்படுத்தும் வளாகங்களாகப் பயன்படுத்தப்பட இருப்பதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறினார்.
கொவிட்-19 பரவலைக் கையாளும் அமைச்சர்கள்நிலை பணிக்குழுவின் தலைவர்களுள் ஒருவரான அவர், விடுதிகளை கிருமித்தொற்றிலிருந்து விடுவிப்பது மிகக் கடினமான பயணம் என்றதுடன் அதன் தொடர்பில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
விடுதிவாசிகளான 28,000 ஊழியர்கள் இன்னும் தனிமைப்படுத்தல் வளாகங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களைத் தவிர, விடுதிகளில் வசிக்கும் மற்ற வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் அடுத்த மாத தொடக்கத்தில் கொவிட்-19லிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
தனிமைப்படுத்தல் காலம் முடிந்ததும் அவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும். தொற்று இல்லை என்று உறுதியானதும், அவர்கள் பணிக்குச் செல்லத் தயார்.
நிறுவனங்கள் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது உறுதி செய்யப்படும் என்று இன்று நடைபெற்ற மெய்நிகர் கூட்டத்தில் திரு வோங் குறிப்பிட்டார்.

