4 வயது சிறுமியை கொன்று, எரித்ததன் தொடர்பில் தாய் உட்பட மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டது

2 mins read
d0f85bcd-eeae-474e-bf3d-1867c80c213c
கொலையை மறைக்கும் நோக்கில் அந்தச் சிறுமியின் உடலை பாயா உபி தொழிற்பேட்டைக்கு அப்புறப்படுத்தி ஒரு உலோக உருளையில் வைத்து எரித்ததாகக் கூறப்பட்டது. படம்: SCREENGRAB FROM GOOGLE MAPS -

நான்கு வயது மகளைக் கொன்று, எரித்ததாக 24 வயது தாய், 33 வயது ஆடவர் ஆகியோர் மீது இன்று (ஜூலை 25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

அந்தச் சிறுமியின் உடலை அப்புறப்படுத்துவதற்கு உதவியதாக நோவெல் சுவா ரௌஷி எனும் 30 வயதுப் பெண் மீதும் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

வோங் ஷி சியாங் எனும் அந்த ஆடவர், ஃபூ லி பிங் எனும் அந்தப் பெண் ஆகியோர் மேகன் குங் யு வாய் எனும் அந்தச் சிறுமியை பாய லேபரில் உள்ள Suites @ Guillemardல் கடந்த பிப்ரவரி மாதத்தில் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

மேகனைப் பெற்ற தாய் ஃபூ என போலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொலையை மறைக்கும் நோக்கில் அந்தச் சிறுமியின் உடலை பாயா உபி தொழிற்பேட்டைக்கு அப்புறப்படுத்தி ஒரு உலோக உருளையில் வைத்து எரித்ததாகக் கூறப்பட்டது.

சம்பவத்தில் தொடர்புடைய ஆடவருக்கும் மற்ற இரு பெண்களுக்கும் இடையே என்ன தொடர்பு என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

கடந்த திங்கட்கிழமை மாலை 5.36 மணிக்கு நான்கு வயதுச் சிறுமி காணாமல் போனதாக போலிசில் புகார் செய்யப்பட்டது.

அந்தச் சிறுமி இறந்துபோனது தெரியவந்தது. சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் அடையாளம் காணப்பட்டனர்.

வோங், ஃபூ, சுவா ஆகிய மூவரும் மத்திய போலிஸ் பிரிவில் காவலில் வைக்கப்பட்டனர். வழக்கு மீண்டும் ஜூலை 30 அன்று விசாரணைக்கு வரும்.

சிறுமியைக் கொன்றது நிரூபிக்கப்பட்டால், கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

குற்றத்தை மறைக்கும் நோக்கில் சடலத்தை அப்புறப்படுத்தியது நிரூபணமானால் அந்த நபருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்