பிரதமர் லீ: அமெரிக்க- சீன ஒற்றுமையை விரும்புகிறோம்

சீனாவுடனான தனது உறவை அமெரிக்கா மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் விருப்பம் தெரிவித்துள்ளார். 

இவ்விரு நாடுகளுக்கும் இடையே சீரான உறவு இருந்தால் மட்டுமே ஆசிய நாடுகளின் பொருளியல் வளர்ச்சி அடைய ஏதுவான சூழல் அமையும் என்றார் அவர்.

அமெரிக்க வர்த்தகர் டேவிட் ரூபன்ஸ்டைன் நேற்று (ஜூலை 28) பிரதமர் லீயை இணையம் வாயிலாகப் பேட்டி கண்டார். 

அப்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே சீரான உறவு இருப்பதை சிங்கப்பூர் விரும்புவதாக திரு லீ கூறினார்.

எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர் அமெரிக்கா- ஆசியா உறவு தொடர்பில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கு இடையிலான ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திரு லீ தெரிவித்தார். 

அப்போதுதான் அந்த அதிபரின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிலைத்தன்மையுடன் விளங்கும் என்றார் அவர்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த பராக் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கைக்கும் தற்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வெளியுறவுக் கொள்கைக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் சுட்டினார்.

இதற்கிடையே, கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் இரண்டு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் இவ்வாண்டு சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி எதிர்மறையாகப் பதிவாகும் சாத்தியம் இருப்பதாக பிரதமர் லீ கூறினார்.

இருப்பினும்,  கொவிட்-19 நெருக்கடி நிலையிலும் போக்குவரத்து போன்ற முக்கிய சேவைகள் தொடர்ந்து துரிதமாக நடப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார் பிரதமர் லீ.

அப்போதுதான் வழக்கநிலை திரும்பியதும் சேவைகள் எப்போதும் போல தொடரும் என்று அட்லான்டிக் மன்றம் எனும் அமெரிக்க ஆய்வகம் நடத்திய மெய்நிகர் கலந்துரையாடலில் பிரதமர் லீ தெரிவித்தார்.