கொவிட்-19: மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்; பாதிக்கு மேற்பட்டோர் இந்தியாவிலிருந்து திரும்பியவர்கள்

கொவிட்-19: மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்; பாதிக்கு மேற்பட்டோர் இந்தியாவிலிருந்து திரும்பியவர்கள்

2 mins read
d5d333e4-3dff-449d-b186-1db541e6ce8e
கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 9 வெவ்வேறு நாடுகளிலிருந்து  சிங்கப்பூருக்குத் திரும்பியவர்களில் 106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் கடந்த மாதத்தில் 100க்கு மேற்பட்டவர்களுக்கு சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அத்தகையோரிடையே சிங்கப்பூர் கொவிட்-19 மூன்றாம் அலையை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது.

இவ்வாண்டு தொடக்கம் முதல் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த, கொவிட்-19 உறுதி செய்யப்பட்டவர்களிடையே, கடந்த மாதம் பதிவான எண்ணிக்கை 15.5%. வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்களில் மொத்தம் 688 பேருக்கு இங்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்த பிறகு இந்தப் பிரிவில் பதிவாகும் கிருமித்தொற்று எண்ணிக்கை குறைந்து பூச்சியமானது.

ஆனால், சிங்கப்பூரில் இரண்டாம் கட்டத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது நீண்டகால தங்கும் அனுமதி அட்டை வைத்திருப்போர் சிங்கப்பூருக்குத் திரும்ப அனுமதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜூன் 30 அன்று சிங்கப்பூரில், இந்தப் பிரிவில் மீண்டும் கிருமித்தொற்று பதிவானது.

கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 9 வெவ்வேறு நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பியவர்களில் 106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் பாதிக்கும் அதிகமானோர், அதாவது 62 பேர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.

இந்தியாவில் கிருமித்தொற்று எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், கொரோனா தொற்றால் 35,000க்கும் அதிகமானோர் பலியாகினர்.

இம்மாதம் இங்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 23 பேர் பிலிப்பீன்சை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் இந்தோனீசியா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இந்தப் பிரிவில் இம்மாதம் கிருமித்தொற்று கண்டவர்களில் 27 பேர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்போர்; 23 பேர் சிங்கப்பூரர்கள்; 20 பேர் நிரந்தரவாசிகள்; 19 பேர் சார்ந்திருப்போர் அட்டை வைத்திருப்போர்.

ஏற்கெனவே அனுமதி பெற்று, சிங்கப்பூருக்குத் திரும்புவோர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களது இல்லத் தனிமைக் காலம் நிறைவடைவதற்கு முன்பாக அவர்களுக்கு கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்