இந்தியாவிலிருந்து திரும்பிய 10 வயது சிறுவன் உட்பட நால்வருக்கு கொவிட்-19; இருவர் மாணவர்கள்

இந்தியாவிலிருந்து திரும்பிய 10 வயது சிறுவன் உட்பட நால்வருக்கு கொவிட்-19; இருவர் மாணவர்கள்

2 mins read
8a546237-314b-4ba9-8d30-c84e90a336d8
14 நாட்கள் இல்லத் தனிமையில் இருந்த நால்வருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் நேற்று (ஜூலை 29) உறுதி செய்யப்பட்ட 334 கொவிட்-19 சம்பவங்களில், நால்வர் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்ற தகவலை சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவர்களில் இம்மாதம் 14ஆம் தேதி இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த மாணவர்களுக்கான அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் 10 வயதுச் சிறுவனும் ஒருவர்.

இம்மாதம் 17ஆம் தேதி இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 36 வயது சிங்கப்பூர் பெண்மணிக்கும் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தோனீசியாவிலிருந்து இம்மாதம் 17ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்த 18 வயது இளையருக்கும் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரும் மாணவர் அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்.

பிலிப்பீன்சிலிருந்து ஜூலை 17ஆம் தேதி வந்த வெளிநாட்டு இல்லப் பணிப்பெண், நேற்று அத்தகைய பிரிவில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நான்காவது நபர்.

உள்ளூர் சமூகத்தில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மூவரில் இருவர் சிங்கப்பூரர்கள். மற்றவர் வேலை அனுமதி அட்டையுடன் இங்கு பணிபுரிபவர். ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் இவர்களுக்கு தொடர்பு இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இம்மூவருக்கும் கிருமித்தொற்று அறிகுறிகள் இல்லை.

உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 4ஆக குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 9 ஆக இருந்தது.

ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 2ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 5 ஆக இருந்தது.

இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கொவிட்-19 தொடர்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் யாரும் சிகிச்சை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்