‘சிறைச்சாலையில் கொவிட்-19 உறுதி செய்யப்பட்ட 6வது நபரான இலங்கை நாட்டவருக்கு டெங்கி இருந்தது’

சிங்கப்பூரில் இம்மாதம் 3ஆம் தேதி உள்ளூர் சமூகத்தில்  கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 26 வயது ஆடவர் இலங்கையிலிருந்து குறுகியகால சுற்றுப் பயண விசாவில் இங்கு வந்தவர்.

அவர், அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதல் நாட்களுக்கு சட்ட விரோதமாக சிங்கப்பூரில் தங்கியதால் நான்கு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்.

சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காகக் காத்திருந்தபோது அவருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது.

தற்போது நலமாக இருக்கும் அந்த ஆடவருக்கு சாங்கி சிறைச்சாலை வளாகத்தில் இருந்தபோது 3 முறை சளி / எச்சில் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது தினமும் 3 முறை அவரது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு கிருமித்தொற்று எங்கிருந்து பரவியது என்பது தெரியவில்லை. 

கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்த ஆடவர், ஜூன் 30ஆம் தேதி கைதானார். அவருக்கு 4 வார சிறைத்தண்டனை ஜூலை 6 அன்று விதிக்கப்பட்டது.

ஜூலை 2ஆம் தேதி அவருக்கு கொவிட்-19 பரிசோதனை எடுக்கப்பட்டது. 

ஜூலை 8 அன்று சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டெங்கிக்கு சிகிச்சை பெற்று 13ஆம் தேதி சிறைக்குத் திரும்பிய அவர், ஏற்கெனவே தங்கியிருந்த மற்ற இருவருடன்  இருந்தார்.

ஜூலை 22ஆம் தேதி மீண்டும் கிருமித்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அப்போதும் அவருக்கு கொவிட்-19 இல்லை என்பது உறுதியானது.

இலங்கைக்கு அனுப்பப்படுவதற்காக ஜூலை 27ஆம் தேதி அவர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

டெங்கி தொற்றின் தொடர்பிலான மறு ஆய்வுக்காக ஜூலை 28ஆம் தேதி கூ டெக் புவாட் மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். இலங்கைக்கு விமானம் இல்லாததால்அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு ஜூலை 30 அன்று திரும்பினார்.

மீண்டும் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. 

அவர் புழங்கிய இடங்கள் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் வழிகாட்டுதலின்படி, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டதாக சிறைச்சாலைத் துறையும், குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையமும் தெரிவித்தன.

ஆயினும் சிறைச்சாலையைச் சேர்ந்த ஒரு அதிகாரி, குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடி அதிகாரிகள் ஐவர், துணை போலிஸ் அதிகாரிகள் ஐவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜூலை 30 அன்று அவர் சிறைக்குச் சென்றபோது அதே நாளில் சிறைக்குச் சென்று, ஆவருடன் தங்கியிருந்த இருவருக்கும் கிருமித்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்குத் தொற்று இல்லை.

சிங்கப்பூரில் சிறைச்சாலையில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஆறாவது நபர் இவர். நான்கு கைதிகள், ஒரு தாதி ஆகியோருக்கு அங்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அனைவரும் குணமடைந்துவிட்டனர்.

ஆனால் அவர்களுடன், இந்த இலங்கை ஆடவருக்குத் தொடர்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon