சிங்கப்பூரில் நேற்று (ஆகஸ்ட் 17) உறுதி செய்யப்பட்ட 100 கொவிட்-19 சம்பவங்களில், வெளிநாடுகளிலிருந்து திரும்பி, இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இருவர் என்ற தகவலை சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவர்கள் இருவரும் இந்தியாவிலிருந்து திரும்பிய பெண்கள். ஒருவர் 32 வயது நிரந்தரவாசி, மற்றொருவர் 30 வயதான, சார்ந்திருப்போர் அட்டை வைத்திருப்பவர்.
விடுதிகளில் தங்கியுள்ள 97 வெளிநாட்டு ஊழியர்களுக்கும் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் 39 வயதான சிங்கப்பூரர். நேற்று உள்ளூர் சமூகத்துடன் தொடர்பிலான ஒரு கிருமித்தொற்று சம்பவம் மட்டுமே உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவர் பேருந்து பணிமனை ஒன்றில் பணிபுரிபவர் என்றும் அவரது பணி நிமித்தமாக அவர் பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளத் தேவையில்லை என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
பணிமனைகளிலும் பேருந்து நிலையங்களிலும் பணிபுரிவோருக்கு அரசாங்கம் மேற்கொண்ட கிருமித்தொற்று பரிசோதனைகளில் அவருக்கு கிருமித்தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.
கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் கடந்த சனிக்கிழமை வரை அத்தகைய சுமார் 14,800 பணியாளர்களுக்கும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டன. 5 பரிசோதனைகளுக்கான முடிவுகள் மட்டுமே இன்னும் பெறப்படவில்லை.
புக்கிட் பாஞ்சாங் போக்குவரத்து மையத்தில் கடந்த மாதம் உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்கள் உட்பட மொத்தம் 10 பேருக்கு அந்தப் பரிசோதனைகள் மூலம் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரங்களாக தொடர்ந்து 2 ஆக உள்ளது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த இரு வாரங்களின் தினசரி சராசரி 1 ஆக உள்ளது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் 22.2 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டனர்; இதுவரை 783,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.


