நீடிக்கும் கொவிட்-19 கொள்ளைநோய் மக்களின் மனநலனில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நோய்ப் பரவலின் நிச்சயமற்றதன்மையும் அதனால் ஏற்படும் பொருளியல் வீழ்ச்சியும் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.
கொவிட்-19 கிருமிப் பரவலை சிங்கப்பூர் எதிர்கொண்டபோது, அதன் 'தேனிலவு' கட்டம் முடிந்தவிட்டது என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றின் உளவியல் மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் கொர்னேலியா சீ.
ஜனவரி மாதம் இத்தொற்றுநோய் சிங்கப்பூரில் தலைதூக்கியபோது சமூக பிணைப்புடன் விரைவில் நிலைமை வழக்கநிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையும் இருந்தது. இந்நிலை கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நீடித்தது என்ற டாக்டர் சீ, சிங்கப்பூர் இப்போது விரக்தி நிலையில் உள்ளது எனக் கூறினார்.
அடுத்து வரும் சில மாதங்களில் பதற்றம், மனச்சோர்வு தொடர்பான சம்பவங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
"மார்ச் மாதம் ஊழியர் தங்கும் விடுதிகளில் நோய்த்தொற்று அதிகரித்தபோது இந்த விரக்திநிலை ஏற்பட்டது. சிங்கப்பூரின் ஒட்டுமொத்த பொருளியல் மீட்சி வெளியூரில் இருந்து வரும் நோய்த் தொற்றையும் உள்ளூரில் பரவும் தொற்றையும் எவ்வாறு கட்டுப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது மட்டமல்ல, மற்ற நாடுகள் இதை எப்படி எதிர்கொள்கின்றன என்பதையும் பொறுத்த என்பது நிதர்சனமானது.
"தொற்றுநோய் பரவல் கட்டுப்பாடும் பொருளியல் மீட்சியும் ஏற்படும்போது, விரக்தி நிலையில் இருந்து சிங்கப்பூர் மீட்புக் கட்டத்திற்கு வரும்," என்று டாக்டர் சீ குறிப்பிட்டார்.
தற்போதுள்ள விரக்திநிலை, பாதுகாப்பான, பயனுள்ள, சிறந்த விநியோக முறையைக் கொண்ட தடுப்பூசி கிடைப்பதைச் சார்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
அவசர உதவி சேவைகளுக்கான அழைப்புகள் அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் அபய ஆலோசனை சங்கத்தின் (எஸ்ஓஎஸ்) தலைமை நிர்வாகி காஸ்பர் டான் கூறினார்..
தொடர்புடைய செய்திகள்
அழைப்பவர்களில் பெரும்பாலோர் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், அவர்களின் முக்கிய கவலைகளாக மனநலம், மணவாழ்க்கை, குடும்ப பிரச்சினைகள், உணர்வுபூர்வமான ஆதரவு, நிதி அல்லது வேலைவாய்ப்பு குறித்த கவலைகள் உள்ளன என்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அவசரசேவை அழைப்பு எண்கள்: சிங்கப்பூர் அபய ஆலோசனை சங்கம் (எஸ்ஓஎஸ்): 1800-221-4444 தேசிய பராமரிப்பு அவசரசேவை அழைப்பு எண்: 1800-202-6868 மனநல கழகத்தின் மனநல அவசரசேவை அழைப்பு எண்: 6389-2222 சிங்கப்பூர் சில்வர் ரிப்பன்: 6385-3714 சிங்கப்பூர் மனநல சங்கம்: 1800-283-7019 டிங்கிள் பிரென்ட்: 1800-274-4788


