கிருமித்தொற்று கண்டவர்களில் இருவர் குறுகியகால விசாவில் இம்மாதம் சிங்கப்பூருக்கு வந்தவர்கள்

2 mins read
0fdf627a-f7ad-4847-bfbd-ff0d992454f8
எக்சிலார் கடைத்தொகுதியின் SLR Revolution கடையில் வேலைக்குச் சென்ற 61 வயது ஆடவரும் நேற்று கிருமித்தொற்று அறிவிக்கப்பட்ட, தொடர்புகள் கண்டறியப்படாத ஐவரில் ஒருவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எக்சிலார் கடைத்தொகுதியின் SLR Revolution கடையில் வேலைக்குச் சென்ற 61 வயது ஆடவரும் நேற்று கிருமித்தொற்று அறிவிக்கப்பட்ட, தொடர்புகள் கண்டறியப்படாத ஐவரில் ஒருவர்.

மூச்சுத் திணறல் இருப்பதாக மருத்துவர் கணிக்கும் 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் பரிசோதனையின்போது, அவருக்கு கிருமித்தொற்று இருப்பது கடந்த வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

ஊழியர்களுக்கு வழக்கமாக அட்டவணைப்படுத்தப்பட்டு செய்யப்படும் பரிசோதனையில், ஒரு மலேசியர், இந்திய நாட்டவர் ஒருவர், பங்ளாதேஷ் நாட்டவர் ஒருவர் என மூவருக்கு கிருமித்தொற்று கண்டறியப்பட்டது. கிருமித்தொற்று தொடர்பு தடம் கண்டறியப்படாத மற்றொரு நபர் 47 வயது சிங்கப்பூர் மாது. முன்களப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் மேற்கொள்ளும் பரிசோதனைகளில் இவருக்கு கிருமித்தொற்று கண்டறியப்பட்டது.

ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்ட 14 வயது சிங்கப்பூர் சிறுவன், சமூகத்தில் கிருமித்தொற்று கண்டறியப்பட்ட மற்றொரு நபர்.

வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 13 பேருக்கு நேற்று கிருமித்தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் இருவர் குறுகிய கால விசாவில் சிங்கப்பூருக்கு வந்தவர்கள். ஒருவர் இந்தியர், மற்றவர் இந்தோனீசியர்.

அவர்களில் ஒருவரது கணவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெறுகிறார். அவரை கவனித்துக்கொள்வதற்காக அந்தப் பெண்ணுக்கு விசா வழங்கப்பட்டது.

மற்றொரு நபர் திட்டப்பணி அடிப்படையில் இங்கு பணிபுரிபவர் என்று தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் இம்மாதம் 7, 9 தேதிகளில் சிங்கப்பூருக்கு வந்து, பின் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

வெளிநாடுகளில் இருந்து திரும்பி, நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஐவர் வேலை அனுமதிச்சீட்டுடன் இங்கு பணிபுரிபவர்கள். மற்ற நால்வர் சார்ந்திருப்போர் அட்டை, நீண்டகால பயண விசா வைத்திருப்பவர்கள்.

ஒருவர் இந்தியாவிலிருந்து திரும்பிய 49 வயது சிங்கப்பூரர்.

உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து 2 ஆக உள்ளது.

ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த இரு வாரங்களின் தினசரி சராசரி 1 ஆக உள்ளது.

இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்