13 கட்டுமானத் தளங்களில் கொவிட்-19 பரவலால் பணிகள் நிறுத்தம்

13 கட்டுமானத் தளங்களில் கொவிட்-19 பரவலால் பணிகள் நிறுத்தம்

1 mins read
c395892e-5143-49bf-b6ac-8572f6b5c2fc
சுங்கை தெங்கா லாட்ஜ் ஊழியர் தங்கும் விடுதியில் புதிய கிருமித்தொற்று குழுமம் உருவாகியிருப்பதையடுத்து, அந்த விடுதியைச் சேர்ந்த ஊழியர்கள் பணிபுரியும் 20 கட்டுமானத் தளங்களில் 13ல் பணிகளை நிறுத்த கட்டட, கட்டுமான ஆணையம் உத்தரவிட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சுங்கை தெங்கா லாட்ஜ் ஊழியர் தங்கும் விடுதியில் புதிய கிருமித்தொற்று குழுமம் உருவாகியிருப்பதையடுத்து, அந்த விடுதியைச் சேர்ந்த ஊழியர்கள் பணிபுரியும் 20 கட்டுமானத் தளங்களில் 13ல் பணிகளை நிறுத்த கட்டட, கட்டுமான ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அந்தக் கட்டுமானத் தளங்களில் பணிபுரிவோருக்கு கொவிட்-19 பரவல் உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத் தளங்களில் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளில் ஏதாவது குறைபாடு இருந்தால், அவற்றைச் சரிசெய்து, கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக நிறுவனங்களுக்கு பணி நிறுத்த ஆணை வழங்கப்பட்டிருப்பதாக நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்தது.

அந்த 20 கட்டுமானத் தளங்களும் வர்த்தக, உள்கட்டமைப்பு திட்டப்பணிகளை உள்ளடக்கியவை என்றது கட்டட, கட்டுமான ஆணையம்.

இம்மாதம் 11ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள அனைத்து ஊழியர் தங்கும் விடுதிகளும் கொவிட்-19லிருந்து விடுபட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து, கடந்த சனிக்கிழமை சுங்கை தெங்கா லாட்ஜ் ஊழியர் விடுதியில் புதிய கிருமித்தொற்று குழுமம் உருவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன் தினம் காக்கி புக்கிட்டில் இருக்கும் மற்றொரு தங்கும் விடுதியிலும் புதிய கிருமித்தொற்று குழுமம் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்