சிறுநீரக நோயாளி திரு லீ குவென் ங்கியான், 'டயாலிசிஸ்' எனும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்குச் சென்றிருந்தபோது, சீறுநீர் நீக்கக் குழாயை அவரது உடலுக்குள் செலுத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அது தவறுதலாக அவரது ரத்த குழாயையும் நரம்பையும் குத்தியதில் துளை ஏற்பட்டதால் அவர் இறந்து போனார் என்று தெரிவிக்கப்பட்டது.
டான் டோக் செங் மருத்துவமனையில் 2016ல் நடந்த இந்த மரணம், சிங்கப்பூரின் இத்தகைய முதல் சம்பவம் என்று கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் ஆராயுமாறு சிங்கப்பூர் மருத்துவக் கழகம் இரு மருத்துவ நிபுணர்களை நியமித்தது.
அப்போது 74 வயதான திரு லீக்குச் சிகிச்சை செய்த டாக்டர் சீ யோங் பே, அவரது அடிவயிற்றில் துளையிட்டபோது, அதிக அழுத்தம் காரணமாக அவரையே அறியாமல், தவறான முறையில் முதியவரின் ரத்தக்குழாய் மற்றும் நரம்புகளில் துளை ஏற்பட்டிருக்கக்கூடும் என்று ஒரு நிபுணர் தெரிவித்தார்.
திரு லீக்கு நேர்ந்தது, 'உண்மையில் மருத்துவ ரீதியாக ஏற்பட்ட ஓர் அசம்பாவிதம்' என்று மரண விசாரணை அதிகாரி மார்வின் பே நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


