சிங்கப்பூரில் இன்று (ஆகஸ்ட் 28) நண்பகல் நிலவரப்படி புதிதாக 94 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56,666 ஆகியுள்ளது.
இன்று உள்ளூர் சமூகத்தில் நால்வருக்கு கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்கள் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்று அமைச்சின் முதற்கட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 10 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
எஞ்சிய 80 கிருமித்தொற்று சம்பவங்களில் 58 சுங்கை தெங்கா லாட்ஜ் விடுதியுடன் தொடர்புடையவை. அவர்கள் அனைவரும் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
சுங்கை தெங்கா விடுதியில் ஆகஸ்ட் 22ஆம் தேதி புதிய கிருமித்தொற்று குழுமம் அறிவிக்கப்பட்டதையடுத்து சுமார் 4,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் சுமார் 3,000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டவர்களில் எஞ்சியவர்களுக்க்கும் கிருமித்தொற்று பரிசோதனைகள் முடியும் வரை, இன்னும் சில நாட்களுக்கு கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என அமைச்சு தெரிவித்தது.

