சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு மற்றும் கண்காட்சி நிலையம் கிட்டத்தட்ட பாதி ஊழியர்களை ஆட்குறைப்பு செய்திருக்கிறது. கூட்டங்கள், கண்காட்சிகள், மாநாடுகள் போன்றவை நலிந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பை சன்டெக் சிங்கப்பூர் வெளியிட்டுள்ளது.
அந்த வளாகத்தில் உணவு தயாரிப்பு, விற்பனை, நிகழ்ச்சிகள், மனிதவளம், நிதி போன்ற துறைகளில் பணியாற்றிய 60 சிங்கப்பூரர் மற்றும் நிரந்தரவாசிகளும் 25 வெளிநாட்டு ஊழியர்களும் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, சன்டெக் சிங்கப்பூர் நிறுவனத்தில் 89 உள்ளூர் பணியாளர்களும் நான்கு வெளிநாட்டு ஊழியர்களும் பணியைத் தொடர்வர்.
கட்டட கட்டுமானம் மற்றும் மர தொழிற்சாலைகள் ஊழியர்களின் சங்கமான Batu உடன் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இணைந்து செயல்பட்டு, விடுப்பு, குறுகிய வேலை நேரம், தற்காலிக சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளையும் சன்டெக் சிங்கப்பூர் எடுத்து வந்தது. தேவையற்ற செலவினங்களையும் குறைத்து வந்ததாக நிறுவனம் தெரிவித்தது.
அந்த நிறுவனத்தின் நிர்வாகமும் 40 விழுக்காடு வரையிலான சம்பள வெட்டை ஏற்றுக்கொண்டாலும், சூழ்நிலை எப்போது சீராகும் என்பது நிச்சயமற்றதாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இறுதி முயற்சியாக ஆட்குறைப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் தகுதிபெறும் ஊழியர்களுக்கு உரிய வேலை நீக்க ஊதியம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.


