சிறுவனை தலையில் அடித்து, மூக்கில் குத்தி ரத்தக் காயம் விளைவித்து ஈராண்டுகளாகத் துன்புறுத்திய 'சித்தி'

சிறுவனை தலையில் அடித்து, மூக்கில் குத்தி ரத்தக் காயம் விளைவித்து ஈராண்டுகளாகத் துன்புறுத்திய 'சித்தி'

1 mins read
a2065853-6706-4e71-84d6-df6bde233e5b
-

பீங்கான் கிண்ணத்தால் தலையில் அடித்து, அதனால் ஏற்பட்ட காயத்துக்கு தையல் போடவேண்டிய நிலைக்கு ஆளாக்கியது;

மற்றொரு சம்பவத்தில் மூக்கில் குத்தியதில் ரத்தம் வடிந்தது;

ஈன்ற தாயைப் பற்றி தகாத வார்த்தைகளால் சாடியது - இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு சிறுவன் ஆளானதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

துன்புறுத்தியவர் வேறு யாருமல்ல; சித்தி (மாற்றாந்தாய்). சிறுவனின் 'நன்னடத்தை விருதுச் சான்றிதழை'யும் கிழித்து எறிந்தார் அந்த 44 வயது சிங்கப்பூர் மாது.

இத்தகைய 3 குற்றச்சாட்டுகளை அந்தப் பெண் இன்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்; மேலும் 2 குற்றச்சாட்டுகள் தீர்ப்பின்போது கவனத்தில் கொள்ளப்படும்.

சிறுவனுக்கு 11 வயதாக இருந்தபோது 2016ஆம் ஆண்டு நவம்பரில் இத்தகைய துன்புறுத்தல்களைத் தொடங்கிய அந்த மாது, 2018ஆம் ஆண்டு ஜூலை வரை தொடர்ந்தார்.

சிறுவன் துன்புறுத்தப்பட்டதைக் கண்டுபிடித்த அவனது ஆசிரியை பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டார். பின்னர் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கு தகவல் தரப்பட்டது. அந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி சிறுவன் கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

சிராய்ப்புக் காயங்கள் உட்பட பல காயங்கள் சிறுவனுக்கு இருப்பதை மருத்துவமனை உறுதிப்படுத்தியது.

தற்போது $8,000 மதிப்பிலான பிணையில் இருக்கும் அந்த மாதுவுக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும். சிறுவனைக் காயப்படுத்திய ஒவ்வொரு குற்றத்துக்கும் நான்காண்டுகள் வரை சிறைத் தண்டனை, $4,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

சிறுவன் இப்போதும் சித்தியுடனும் தம் தந்தையுடனும்தான் வசிக்கிறானா என்பது தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்