மதுபானக்கூடம் ஒன்றிலும் இரு உணவகங்களிலும் கொவிட்-19க்கு எதிரான பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படாததைத் தொடர்ந்து, சிங்கப்பூர் உணவு அமைப்பு அவற்றை மூட உத்தரவிட்டுள்ளது.
ஹெவ்லக் சாலையில் உள்ள 'எஸ்-டிரைப்ஸ் ஹாட்பாட்' எனும் உணவகம் இன்று முதல் இம்மாதம் 11ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இரவு 10.30 மணிக்குப் பிறகு அந்த உணவகத்தில் மதுபானம் விற்கப்பட்டது. உணவக ஊழியர்கள் தேநீர் பாத்திரங்களிலும் கிரீன் டீ போத்தல்களிலும் மதுபானத்தை ஊற்றி அவற்றை வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறினர்.
முகக்கவசங்களைச் சரியாக அணியுமாறு அறிவுறுத்தப்பட்டும் உணவக ஊழியர்கள் அதைச் செவிமடுக்கவில்லை என்று உணவு அமைப்பு கூறியது. அந்த உணவகத்திற்கு $2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சைன்ஸ் பார்க் டிரைவில் உள்ள 'விம்சிகல் பார்' மதுபானக்கூடமும் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு 10.30 மணிக்குப் பிறகு அங்கு மதுபானம் விற்கப்பட்டது. ஐந்துப் பேருக்கும் அதிகமானோர் ஒன்றாக அமர்ந்து பேசுவதை அந்த மதுபானக்கூடம் அனுமதித்ததாக உணவு அமைப்பு தெரிவித்தது.
உணவுக்கடை உரிமம் பெறாமல் அது செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உரிமம் பெறும் வரை அந்த மதுபானக்கூடம் மூடப்பட்டிருக்க வேண்டும். அந்த மதுபானக்கூடத்திற்குப் பக்கத்தில் உள்ள 'கியேட் கிச்சன்' எனும் உணவகமும் பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்காதது கண்டறியப்பட்டது.
இன்று முதல் இம்மாதம் 11ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்விரு வர்த்தகங்களுக்கும் தலா $1,000 அபராதம் விதிக்கப்பட்டது.


