கொரோனா தொற்று நெருக்கடியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள விமானத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் இப்போது கூடுதலான உதவித்தொகையுடன் அதிகமான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் வாய்ப்புகளையும் பெற வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் துறையைச் சேர்ந்தவர்களுக்காக 13,000க்கும் மேற்பட்ட பயிற்சி இடங்களும் கிட்டத்தட்ட 100 பாடப் பிரிவுகளும் தயார்நிலையில் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.
'ஏர்கிராஃப்ட் மெயின்டெனன்ஸ்', 'அனலெட்டிக்ஸ் அண்ட் ரோபோட்டிக்ஸ் ஆப்ரேஷன்' உள்ளிட்ட பாடங்களை இந்தப் பயிற்சி வகுப்புகளில் அவர்கள் கற்றுக்கொள்ளலாம். பயிற்சியின்போது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணத்தில் 90 விழுக்காடு வரை அரசாங்கம் வழங்கும்.
வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுங் சிங், மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவோங் ஆகியோர் நேற்று 'சிங்கப்பூர் ஏரோ இன்ஜின் சர்விசஸ்' பணிமனைக்கு மேற்கொண்ட வருகையின்போது இந்த உதவி நடவடிக்கை குறித்து அறிவித்தனர்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், என்டியுசி கற்றல் மையம், 'எஸ்ஐஏ இன்ஜினியரிங் கம்பெனி', 'எஸ்டி இன்ஜினியரிங் ஏரோஸ்பேஸ்', தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவை இந்தப் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன.
முன்னதாக, கொவிட்-19 நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆறு துறைகளுக்கு இதுபோன்ற பயிற்சி உதவித்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சிதான் இந்த மேம்படுத்தப்பட்ட பயிற்சி உதவித் திட்டம்.
சுற்றுப்பயணத்துறை, விமானப் பயணம், சில்லறை வியாபாரம், உணவுச் சேவை, நிலப் போக்குவரத்து, கலைகள் மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் இருந்து 920 நிறுவனங்களைச் சேர்ந்த 35,000 ஊழியர்கள் இந்த உதவித் திட்டத்தின் மூலம் பயிற்சி பெறுகின்றனர்.
ஊழியர்கள் அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து இந்த உதவித் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்பதால் மொத்தம் 84,000 பயிற்சி இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன.
தொடர்புடைய செய்திகள்
விமானத் துறையின் தேவை இப்போது சரிவுகண்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தத் துறையில் நீண்டகால நோக்கிலான வாய்ப்புகள் எப்போதும் போலவே நல்லமுறையில் உள்ளதாக திரு சான் கூறினார். இந்தத் துறை மீண்டு எழும் என்பதில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை இந்த உதவித் திட்ட நீட்டிப்பு காட்டுவதாக அமைச்சர் கூறினார்.
விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தத் தலைமுறையில் உள்ள இயந்திரம் சார்ந்த திறனைப் பெறுவதற்காக மட்டும் நாம் முதலீடு செய்யவில்லை. புதிய தலைமுறை இயந்திரங்களைக் கையாளுவதற்கான மின்னியல் திறன் உள்ளிட்ட புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளவும் இது உதவும் என்றார். அத்துடன் இத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவையும் தாண்டி, ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் திரு சான் வலியுறுத்தினார்.
விமானத் துறை சார்ந்த செயல் திறன்கள் தனித்தன்மை கொண்டவை. இந்தத் துறையைச் சேர்ந்த திறனாளர்கள், வேறு துறைக்குச் சென்றுவிட்டு திரும்பவும் விமானத் துறை சார்ந்த திறன்களைப் பெறுவது என்பது கடினமான செயல்.
எனவே விமானத் திறனாளர்கள் வேலையிழக்காமல் இந்தத் துறையில் ஒரு நிலைத்தன்மையை கட்டிக்காப்பது மிக முக்கியம். அப்போதுதான் எதிர்காலத்தில் இந்தத் துறையின் தேவையை ஈடுகட்டும் அளவுக்கு திறன்வாய்ந்த பொறியாளர்களை நாம் கொண்டிருக்க முடியும் என்று திரு சான் கூறினார்.


