2017ஆம் ஆண்டில் வயது முதிர்ந்த தம்பதியைக் கொன்ற இந்தோனீசிய பணிப்பெண், தொடக்கத்தில் அவர்களைவிட்டு ஓடிப்போய்விட மட்டுமே தாம் எண்ணியதாகவும் அவர்களுடன் ஏற்பட்ட சச்சரவுக்குப் பின்னரே இந்த இரட்டைக் கொலையைத் தாம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
திரு சியா நிம் ஃபோங்கிற்கு ரத்தக் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தாம் பதற்றமடைந்ததாகவும் முக்காலியைக் கொண்டு அந்த 79 வயது முதியவரின் தலையில் தாம் அடித்ததாகவும் கசானா (படம்) என்ற அந்தப் பணிப்பெண் கூறினார்.
திரு சியாவின் மனைவி திருவாட்டி சின் செக் ஃபா தம்மை எதிர்த்தபோது அந்த 78 வயது மூதாட்டியைத் தரையில் தள்ளிவிட்ட கசானா, அவருக்கு மூச்சு, பேச்சு போகும் வரை அவர் மீது பலமுறை ஏறி மிதித்தார்.
அந்த மூத்த தம்பதியின் மரணம் குறித்து மரண விசாரணை அதிகாரி மேற்கொண்ட விசாரணையின் முடிவில் இந்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. இரட்டைக் கொலை நிகழ்ந்த ஒரு வாரம் கழித்து இந்தோனீசியாவில் அந்தப் பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.
புளோக் 717 பிடோக் ரெசர்வோர் ரோட்டில் இருந்த அந்தத் தம்பதியின் இல்லத்தில், அலமாரியில் தமது பாஸ்போர்ட் இருந்ததை கசானா கண்டார்.
2017ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி பாத்தாம் தீவுக்குப் புறப்பட கசானா முடிவெடுத்ததாக மரண விசாரணை அதிகாரி கமலா பொன்னம்பலம் தெரிவித்தார்.
அந்தத் தம்பதியின் வீட்டில் சுமார் ஒரு மாதகாலமாகத்தான் கசானா பணிபுரிந்தார். எனினும், அவர்களுக்கு வேலை செய்ததில் தமக்கு மகிழ்ச்சி இல்லை என்று இந்தோனீசிய போலிசிடம் அவர் கூறினார்.
இந்தோனீசியாவில் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதிக்கும் மே 2ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தக் கொலை குறித்து கசானாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
எனினும், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தபின் 20 ஆண்டு சிறைத் தண்டனையாக அது குறைக்கப்பட்டது.


