அதிரடி நாயகர்கள் கருப்பொருளுடனான தபால்தலைகளைக் கல்வி அமைச்சுடன் இணைந்து சிங்போஸ்ட் வெளியிட்டுள்ளது.
கொரோனா கிருமித்தொற்றிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் முறையை மாணவர்களுக்குக் காட்டும் அதிரடி நாயகர்களின் படங்கள் இத்தபால் தலைகளில் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களிடையே கொரோனா கிருமி பரவாமல் இருக்க ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் முக்கிய பங்கிற்குப் புகழாரம் சூட்டும் வகையில் ஆறு தபால்தலைகளைக் கொண்ட தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆசிரியருக்கும் இந்தப் புதிய தபால்தலைகளைக் கொண்ட கடித உறை தரப்படும்.
உடல்வெப்பநிலையை அன்றாடம் சோதித்துப் பார்க்கவேண்டும் என்று மாணவர்களுக்கு நினைவூட்டும் வைரஸ் ஸ்கிரீனர் வருண், முகக்கவசம் அணியும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மாஸ்க் அப் மெய் மெய், கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவ வேண்டும் என்பதை வலியுறுத்தும் சூப்பர் சோப்பர் சோஃப்பி, கைகளால் முகங்களைத் தொட வேண்டாம் என மாணவர்களுக்கு நினைவூட்டும் ஹேண்ட்ஸ் டௌன் ஹெனா, இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க மாணவர்களுக்கு நினைவூட்டும் வைப் அப் வில்சன் ஆகிய ஐந்து அதிரடி நாயகர்களைப் புதிய தபால்தலைத் தொகுப்பு கொண்டுள்ளது.
ஆறாவது தபால்தலையில் அனைத்து அதிரடி நாயகர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு தபால்தலையின் விலை 30 காசிலிருந்து 70 காசு வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தபால்தலைத் தொகுப்புகள் தலா $5.55க்கு விற்கப்படுகின்றன.
இப்புதிய தபால்தலைகளை அனைத்து அஞ்சல் அலுவலகங்கள், தபால்தலைகளை விற்கும் கடைகள், shop.singpost.com இணையத்தளம் ஆகியவற்றிலிருந்து வாங்கலாம்.


