எச்ஐவி சிகிச்சைக்கான 16 மருந்துகளுக்கு மானியம்: சுகாதார அமைச்சு

1 mins read
e97a03eb-a53f-42dc-8222-62bc2f107a38
நோயாளியின் நிலையைப் பொறுத்து, இந்த 16 மருந்துகளில் எவற்றையாவது வாங்குவோருக்கு 50 முதல் 75% வரையிலான  மானியம் கிடைக்கும். -

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 16 மருந்துகளை இம்மாதம் முதல் தேதியிலிருந்து விலை குறைக்கப்பட்ட மருந்துகளாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ட்ருவாடா, எடுரான்ட் போன்ற மருந்துகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டியவர்கள் மாதந்தோறும் $500 வரை செலவு செய்ய வேண்டியிருந்தது. அத்தகைய மருந்துகளை பேங்காக் போன்ற இடங்களில் சிலர் வாங்கிப் பயன்படுத்தி வந்தனர். அவர்களும் மாதந்தோறும் சுமார் $150 வரை செலவு செய்தனர்.

ஆனால், தற்போதைய அறிவிப்புக்குப் பிறகு, இந்த மருந்துகளுக்கு மாதந்தோறும் சுமார் $55 மட்டுமே செலவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மருந்துகளை வாங்க மருந்து உதவி நிதியிலிருந்து உதவியும் பெற முடியும்.

நோயாளியின் நிலையைப் பொறுத்து, இந்த 16 மருந்துகளில் எவற்றையாவது வாங்குவோருக்கு 50 முதல் 75% வரையிலான மானியம் கிடைக்கும்.

இந்த மருந்துகளின் விலையில் மானியம் வழங்கப்படுவதால், எச்ஐவியுடன் வாழ்வோர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். எச்ஐவி பரவலைத் தடுக்கவும் இது அவசியம் என்று ஆக்‌ஷன் ஃபார் எய்ட்ஸ் (AFA) எனும் அமைப்பின் நிர்வாக இயக்குநர் திருவாட்டி சுமிதா பானர்ஜி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இறுதி வரை 8,618 சிங்கப்பூர்வாசிகள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 2,097 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்