ஈசூன் வட்டாரவாசிகளுக்கு பல்வேறு வசதிகளுடன் புதிய ஒருங்கிணைந்த திட்டம்

ஈசூன் வட்டாரவாசிகளுக்கு பல்வேறு வசதிகளுடன் புதிய ஒருங்கிணைந்த திட்டம்

1 mins read
541830b3-b9da-40d0-bf20-1c671c5db080
ஈசூன் ரிங் ரோட்டின் சோங் பாங் சமூக மன்றம், ஈசூன் அவென்யூ 5ன் வர்த்தக வீவக புளோக் 102 ஆகியவை தற்போது உள்ள இடத்தில் இப்புதிய திட்டம் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. படம்: சிங்கப்பூர் நில ஆணையம் -

நீச்சல்குளங்கள், உடற்பயிற்சிக் கூடம், புதிய பொலிவுடன் உணவங்காடி நிலையம் சமூக மன்றம் என ஈசூன் வாசிகளுக்காக பலதரப்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம் காத்திருக்கிறது.

'சோங் பாங் சிட்டி'யில் அமையவுள்ள இந்த 0.9 ஹெக்டர் பரப்பளவு திட்டம், 2027ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் 2022ன் இரண்டாம் பாதியில் தொடங்கவுள்ளன.

பல மாடிகளுடைய இத்திட்டத்தின் பெயர் 'ச்சில்@சோங் பாங்' (Chill@Chong Pang) என தற்போது முடிவாகியுள்ளது.

இப்புதிய திட்டம் ஈசூன் வட்டாரவாசிகள் மற்றும் நாட்டின் வடக்கு பகுதியில் வசிப்போரின் தேவைகளுக்கு ஏற்ப அமைந்திடும் என்று சட்ட, உள்துறை அமைச்சரும் நீ சூன் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கா.சண்முகம் இன்று மெய்நிகர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

சோங் பாங் ஈரச்சந்தை மற்றும் உணவு நிலையத்தில் கடை வைத்திருப்பவர்கள், இந்த புதிய ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின்படி இடம் மாறுவர் என்று சிங்கப்பூர் நில ஆணையம், மக்கள் கழகம், தேசிய சுற்றுப்புற அமைப்பு, ஸ்போர்ட் சிங்கப்பூர் ஆகியவற்றின் கூட்டறிக்கை தெரிவித்தது.

1984ஆம் ஆண்டில் கட்டப்பட்டு பின் 2003ல் மேம்படுத்தப்பட்ட உணவு நிலையத்தின் இடத்தில் சமூக கடைத்தொகுதி ஒன்று 2028ஆம் ஆண்டில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்