தொடர்புகளின் தடங்களைக் கண்டறிவதை முடுக்கிவிடும் நடவடிக்கையாக, 'டிரேஸ்டுகெதர்' அடையாள வில்லைகள் வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) முதல் நாடுமுழுவதும் விநியோகிக்கப்பட உள்ளது.
ஜாலான் புசார், தஞ்சோங் பகார் வட்டாரங்களில் இந்த விநியோகம் தொடங்கப்படும் என்று விவேகமான நாடு முயற்சிக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இன்று தெரிவித்தார்.
கொவிட்-19 பாதிப்புக்கு எளிதில் ஆளாகக்கூடிய மூத்தோர்களின் விகிதம் இந்த வட்டாரங்களில் அதிகமாக இருப்பதாகவும் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் 'டிரேஸ்டுகெதர்' செயலியைப் பயன்படுத்துவதில் அவர்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
'டிரேஸ்டுகெதர்' செயலி அல்லது அடையாள வில்லைகளை அதிகமானோர் கூடும் இடங்களிலும், நடவடிக்கைகளின் தன்மை காரணமாக எல்லா நேரத்திலும் முகக்கவசங்களை அணிந்துகொண்டிருக்க முடியாத இடங்களிலும் பயன்படுத்துவதைப் பரிசோதிக்கும் முன்னோடித் திட்டத்தையும் அரசாங்கம் தொடங்கும்.
சுமார் 250 பேர் வரை பங்கேற்கக்கூடிய கூட்டங்கள் மற்றும் மாநாடுகளுக்கு சிங்கப்பூர் அனுமதி அளித்துள்ளதையடுத்து இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
'சேஃப்என்ட்ரி' எனப்படும் உள்நுழைவுப் பதிவுத் தரவுகள், அருகாமையைக் கண்டுபிடிக்க உதவும் 'டிரேஸ்டுகெதர்' தரவுகள் போன்றவற்றின் மூலம் பங்கேற்பாளார்களின் பாதுகாப்பு விரிவுபடுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு இன்று (செப்டம்பர் 9) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
'டிரேஸ்டுகெதர்' அடையாள வில்லை விநியோகம் தொடர்பான தகவல்களை TokenGoWhere இணையப்பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.
கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்கள் சென்ற இடங்களுக்கு, அதே நேரத்தில் சென்றவர்களை எச்சரிக்கை செய்யும் விதத்தில் குறுந்தகவல்களும் அனுப்பப்படும். 'சேஃப்என்ட்ரி' பதிவு செய்பவர்களுக்கு இந்த குறுந்தகவல் அனுப்பப்படும். இதனை 'டிரேஸ்டுகெதர்' செயலியில் காணலாம். அதேபோல உணவகம், உடற்பயிற்சிக் கூடம் போன்ற கொவிட்-19 பரவும் சாத்தியம் அதிகமிருக்கும் இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இருந்தவர்களுக்கும் குறுந்தகவல் எச்சரிக்கைகள் அனுப்பப்படும்.


