கொவிட்-19 கிருமித்தொற்று சூழலுக்கிடையே நாட்டின் பொருளியல், உருமாற்றம் காண்கிறது. இத்தகைய நிலையில் சிங்கப்பூர் தொடர்ந்து அதன் கதவுகளைத் தலைசிறந்த வெளிநாட்டு திறனாளிகளுக்குத் திறந்து வைத்திருக்கும் என்றார் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங்.
அனைத்துலக வர்த்தகங்களின் மதிப்புத் தொடர்கள், உற்பத்தித் தொடர்கள், விநியோகத் தொடர்கள் ஆகியவற்றில் முக்கிய இணைப்பாக சிங்கப்பூர் திகழ விரும்புவதாக அவர் இணையக் கருத்தரங்கு ஒன்றில் குறிப்பிட்டார்.
இத்தகைய இணைப்பாக இருந்தவாறு நம் மதிப்பைக் கூட்டவேண்டும் என்றும் வர்த்தகம் நடைபெற ஓர் இடமாக மட்டுமே நாம் இருக்கக்கூடாது என்றும் அமைச்சர் சான் சுட்டினார்.
அளவிட்டு அனைத்துலக அளவில் திறனாளிகளை இங்கு கொண்டு வருவது அதற்கு வழிவகுக்கும் என்றார் அவர்.
வெளிநாட்டுத் திறனாளர்களை வேலையில் அமர்த்துவதன் தொடர்பில் அண்மையில் எழுந்துள்ள சர்ச்சைகளால் நிறுவனங்கள் பதற்றத்தில் உள்ளதைக் குறிப்பிட்ட திரு சான், இனி வேலை நியமனத்திற்கு தரத்தை நோக்கியவாறு வெளிநாட்டு ஊழியர் கொள்கை செல்ல வேண்டும் என்றார்.
சிங்கப்பூரர்களுக்குப் பலனளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த திறனாளிகள் இங்கு இருக்க வேண்டும். அதேசமயம் வேலைக்கு ஆள் எடுப்பதில் பாரபட்சம் இருப்பது கடுமையாக பார்க்கப்படும் என்றார் திரு சான்.

