சிங்கப்பூரில் நேற்று அறிவிக்கப்பட்ட 75 கொவிட்-19 சம்பவங்களில் ஒன்று உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையது.
டோபி காட் பகுதியில் உள்ள கென்யன்/யுபிஎஸ் கட்டுமானத் தள கொவிட்-19 குழுமத்துடன் தொடர்புடைய 33 வயது பங்ளாதேஷ் ஊழியருக்கு, அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கை பரிசோதனைகளின்போது கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. உள்ளூர் சமூகத்தில் அவர், வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்.
வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 14 பேருக்கு நேற்று கிருமித்தொற்று அறிவிக்கப்பட்டது.
அவர்களில் இந்தியாவிலிருந்து திரும்பிய 6 வயது சிறுவன், 79 வயது முதியவர் ஆகிய இருவரும் சிங்கப்பூரர்கள்.
விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள் 60 பேருக்கு நேற்று கிருமித் தொற்று அறிவிக்கப்பட்டது. அவர்களில் 31 பேர் வெஸ்ட்லைட் டோ குவான் விடுதியைச் சேர்ந்தவர்கள்.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 2 ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது 3 ஆக இருந்தது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் தினசரி சராசரி, கடந்த வாரம் 1 ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது 2 ஆக இருந்தது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.


