சிங்கப்பூரில் மேலும் இரண்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் 2 புதிய கிருமித்தொற்று குழுமங்கள் நேற்று (செப்டம்பர் 10) அறிவிக்கப்பட்டன.
சிங்கப்பூரில் நேற்று அறிவிக்கப்பட்ட 63 கிருமித்தொற்று சம்பவங்களில் தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் 55 பேர்.
ஏற்கெனவே 9 சம்பவங்கள் பதிவாகியிருந்த ஆவெரி லாட்ஜ் தங்கும் விடுதியில் அறிவிக்கப்பட்ட புதிய குழுமத்தில் நேற்று மேலும் 26 சம்பவங்கள் பதிவாகின.
சிலேத்தார் நார்த்தில் உள்ள பிபிடி லாட்ஜ் 1A தங்கும் விடுதியில் ஒரு புதிய குழுமம் நேற்று அறிவிக்கப்பட்டது.
நேற்று அறிவிக்கப்பட்டதில் உள்ளூர் சமூகத்தில் பதிவானவை 2. அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர், மற்றவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்.
இந்தியாவிலிருந்து திரும்பிய பிறகு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மூவரின் குடும்ப உறுப்பினரான அந்த 36 வயது சிங்கப்பூரர், மனைவி மற்றும் குழந்தைகளை தனிமைப்படுத்தல் வளாகத்தில் கவனித்துக்கொள்ள அவர்களுடன் இருந்தார்.
வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பிறகு தனிமைப்படுத்தப்பட்ட அறுவருக்கும் நேற்று கொவிட்-19 அறிவிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் ஐக்கிய அரபு சிற்றரசுகளிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பிய சிங்கப்பூரர்.
மாணவர் அனுமதிச் சீட்டுடன் பிலிப்பீன்சிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவரும் அந்த அறுவரில் ஒருவர்.
தொடர்புடைய செய்திகள்
மற்ற நால்வரும் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள். அவர்களில் ஒருவர் பங்ளாதேஷிலிருந்தும், ஒருவர் ரஷ்யாவிலிருந்தும் வந்தவர்கள். மற்ற இருவரும் இந்தோனீசியாவிலிருந்து வந்தவர்கள்.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 2 ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது 3 ஆக இருந்தது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் தினசரி சராசரி, கடந்த வாரம் 1 ஆக குறைந்துள்ளது.அதற்கு முந்தைய வாரத்தில் அது 2 ஆக இருந்தது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.

