ஜெர்மானியத் தளவாட நிறுவனமான டிபி ஷெங்கா சிங்கப்பூரில் தனது விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக மேலும் 251 பணி இடங்களைச் சேர்க்கவிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு, செயல்முறைப் பொறியியல் போன்ற துறைகளில் ஆள்சேர்ப்பு இடம்பெறும் என்று அந்நிறுவனத்தின் ஒப்பந்தத் தளவாடம், விநியோகத் தொடர் நிர்வாகத்திற்கான துணைத் தலைவர் கேத்தரின் சூ தெரிவித்துள்ளார்.
'தோய்ச்ச பான் ஏஜி' எனும் ஜெர்மானிய ரயில் நிறுவனத்திற்குச் சொந்தமான டிபி ஷெங்கா, சாங்கியில் உள்ள சிங்கப்பூர் விமான நிலைய தளவாடப் பூங்காவின் தடையற்ற வர்த்தகப் பகுதியில் $163 மில்லியன் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தனது புதிய கிடங்கின் செயல்பாட்டைத் தொடங்கியது.
உலகளவில் அந்த நிறுவனத்தின் ஆகப் பெரிய முதலீடு இதுதான். கிட்டத்தட்ட ஏழு காற்பந்துத் திடல் அளவிற்கு, அதாவது 55,000 சதுர அடி பரப்பளவில் ஐந்து தளங்களில் அக்கிடங்கு அமைந்துள்ளது.
இந்தப் புதிய கிடங்குடன் சேர்த்து, டிபி ஷெங்கா நிறுவனம் சிங்கப்பூரில் அத்தகைய 13 கிடங்குகளைக் கொண்டுள்ளது. அவற்றின் மொத்த பரப்பளவு 2.8 மில்லியன் சதுர அடி.

