ஆண்டுக்கு 500 தூதுவர்களுக்குப் பயிற்சி: அறிவார்ந்த நகர் இலக்கை எட்ட உதவுவர்

ஆண்டுக்கு 500 தூதுவர்களுக்குப் பயிற்சி: அறிவார்ந்த நகர் இலக்கை எட்ட உதவுவர்

2 mins read
af12bb0d-bcbd-4b29-80e8-6ef43badf463
அறிவார்ந்த நகர் என்பது இளைஞர்களுக்காக, இளைஞர்களைப் பற்றிய இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் முயற்சி மட்டுமல்ல. அதில் முதியோருக்கும் சரிசம பங்கும் பலனும் இருக்கிறது என்று டாக்டர் ஜனில் குறிப்பிட்டார். படம்: RSVP SINGAPORE -

அறிவார்ந்த நகராக மேம்பட வேண்டும் என்ற இலக்கை சிங்கப்பூர் நிர்ணயித்து இருக்கிறது. இதனையொட்டி அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் 500 மூத்த தொண்டூழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

அவர்கள் அறிவார்ந்த நகர் தூதுவர்களாகச் செயல்பட்டு அன்றாட வாழ்வில் மின்னிலக்க ஆற்றல்களைச் செயல்படுத்துவது எப்படி என்பதை மற்றவர்களுக்குப் போதிப்பார்கள்.

ஆர்எஸ்விபி சிங்கப்பூர் என்ற மூத்த தொண்டூழியர்களுக்கான அமைப்பும் அறிவார்ந்த நகர் மற்றும் மின்னிலக்க அரசு அலுவலகமும் இரண்டாண்டு புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன.

அதன்படி அரசாங்கமும் சமூகமும் இணைந்து செயல்படும். இதன் ஒரு பகுதியாகவே அறிவார்ந்த நகர் தூதுவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். இவர்கள் இணையம் வழியில் பலவற்றையும் கற்பதற்கான இணைய வாசல் ஒன்றையும் இந்த இரண்டு அமைப்புகளும் சேர்ந்து உருவாக்கும்.

அதன் மூலம் இந்தத் தூதுவர்கள் அறிவார்ந்த நகர் பற்றிய பல தகவல்களை அறிந்துகொள்வார்கள். தேர்ச்சிகளையும் கற்றுக்கொள்வார்கள். அந்த இணைய வாசலை பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். மின்னிலக்க அரசாங்கச் சேவைகளை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி அவர்கள் அதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இளையர்களுடன் செம்மையான முறையில் சேர்ந்து செயல்படுவது, ஆளில்லா வானூர்தியைப் பயன்படுத்துவது என்பதை எல்லாம் அவர்கள் அறிந்துகொள்ளலாம்.

முதியவர்கள் தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்த புதிய இணக்கம் பல முயற்சிகளை மேற்கொள்ளும். ஒருவர் மற்றொருவருக்கு உதவிக்கொள்ளும் வகையில் முதியவர்களை மின்னிலக்கத் தேர்ச்சி மிக்கவர்களாக இது உருவாக்கும் என்று தொடர்பு தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.

நேற்றைய புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்து நிகழ்ச்சி ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

அறிவார்ந்த நகர் என்பது இளைஞர்களுக்காக, இளைஞர்களைப் பற்றிய இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் முயற்சி மட்டுமல்ல. அதில் முதியோருக்கும் சரிசம பங்கும் பலனும் இருக்கிறது என்று டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்