வசிப்பிடத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 3,500 பேருக்கு கண்காணிப்புச் சாதனங்கள் வழங்கப்பட்டன

வசிப்பிடத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 3,500 பேருக்கு கண்காணிப்புச் சாதனங்கள் வழங்கப்பட்டன

2 mins read
bd7e773c-ecec-4e5b-88e4-d75bb13c37b1
சாதனங்களை வைத்திருப்போர் அதை வேண்டுமென்றே செயல்படுத்த தவறினால் அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கை எடுப்பார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தங்களது சொந்த வசிப்பிடத்தில் இருக்கும் உத்தரவை நிறைவேற்றுவோருக்கு 3,500க்கும் அதிகமான கண்காணிப்புச் சாதனங்கள் வழங்கப்பட்டிருப்பதாகக் குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்கு வந்திறங்கும் பயணிகள் தங்களது சொந்த வசிப்பிடத்திலேயே இருவார கால தனிமைப்படுத்திக்கொள்ளும் உத்தரவை நிறைவேற்ற அனுமதி வழங்கப்படும்பட்சத்தில், உத்தரவை நிறைவேற்றி முடிக்கும்வரை தங்களது கையில் அந்தக் கண்காணிப்புச் சாதனத்தை அணிய வேண்டும்.

சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு அந்தச் சாதனத்தை அரசாங்கம் வழங்குகிறது.

ஜூன் 18ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா (விக்டோரியா மாநிலத்தைத் தவிர்த்து), சீனா, தைவான், வியட்னாம், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும் மக்காவ் நகரில் இருந்தும் சிங்கப்பூருக்கு வரும் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள், தங்களது சொந்த வசிப்பிடத்திலேயே இருவார கால உத்தரவை நிறைவேற்ற அனுமதி வழங்கப்படுகிறது.

தாங்களோ தங்களது குடும்ப உறுப்பினர்களோ வீட்டு உரிமையாளர்களாக அல்லது வீட்டு வாடகைதாரர்களாக இருந்தால், நீண்டகால அனுமதி அட்டை வைத்து இருப்பவர்களும் தங்களது சொந்த வசிப்பிடத்தில் இருக்கும் உத்தரவை நிறைவேற்றலாம்.

வசிப்பிடத்திற்கு வந்தவுடன் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கண்காணிப்புச் சாதனத்தை அவர்கள் செயல்படுத்த வேண்டும் என்று கடந்த மாதம் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

கண்காணிப்புச் சாதனங்கள் செயல்படுத்தப்படாவிட்டால், அந்தச் சாதனங்கள் இருக்கும் இடத்தை அதிகாரிகள் கண்டுபிடித்து, அவற்றைச் செயல்படுத்த தொழில்நுட்ப உதவியை வழங்குவர்.

சாதனங்களை வைத்திருப்போர் அதை வேண்டுமென்றே செயல்படுத்த தவறினால் அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

பன்னிரண்டு வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்கு மட்டும் இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி, மொத்தம் 162,668 பேருக்கு வீட்டில் அல்லது தனிமைப்படுத்தும் இடத்தில் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஐசிஏ தெரிவித்தது. அவர்களில் 14,053 பேர் தற்போது உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர்.

கடந்த மார்ச் 21ஆம் தேதியில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் அனைத்துப் பயணிகளுக்கும் வீட்டில் அல்லது தனிமைப்படுத்தும் இடத்தில் இருக்கும் உத்தரவு நீட்டிக்கப்பட்டது. உத்தரவு முடிவுறும்போது அவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படுகிறது.

இம்மாதம் 1ஆம் தேதி முதல், சிங்கப்பூருக்கு வருவதற்கு முந்தைய 14 நாட்களில் புருணை, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்தோர், இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் உத்தரவை நிறைவேற்ற வேண்டியதில்லை.

எனினும், சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் அவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்